தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நாடோடியின் சாகசங்கள்! (22)

நாடோடியின் சாகசங்கள்! (22)

நாடோடியின் சாகசங்கள்! (22)


PUBLISHED ON : ஜூலை 18, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: தேவதையிடம் உதவும் வரம் பெற்றிருந்த நாடோடி, பிறர் பார்வையில் இருந்து மறைய மாய மோதிரம் ஒன்றும் வைத்திருந்தான். இவற்றை பயன்படுத்தி, மக்களுக்கு உதவியபடி ஊர் ஊராக சென்றான். புதிதாக வினோத ஊர் ஒன்றுக்கு வந்தான். அங்கு சந்தித்த அனைவரும், வினோத நிகழ்வுகள் குறித்து கூறினர். அவற்றை நம்பவும் இயலாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் குழப்பம் அடைந்தான், நாடோடி. இனி -

புதிய ஊரில், வயலில் நெல் பயிரிடப்பட்டு இருந்ததை கண்டான், நாடோடி. அங்கே, ஒரு ஆணும், பெண்ணும் அமர்ந்திருப்பதையும் பார்த்தான். இருவரின் முகமும் மிகவும் கவலையுடன் காணப்பட்டன.

நாடோடிக்கு இது மேலும் ஆச்சரியமாக இருந்தது.

'ஊரில் அனைவருமே கவலையாக இருக்கின்றனரே... விசாரித்தால், ஒவ்வொருவரும் ஒரு வினோத சம்பவம் நடந்ததாக கூறுகின்றனர். இவற்றை நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் இயலவில்லை. எவ்வளவோ சாகசங்களை நடத்தி விட்டோம். இங்கு நடக்கும் சம்பவங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறதே...' என, எண்ணியபடி, அந்த இருவரிடம் விசாரித்தான்.

'அதோ பெரிய கிணறு எங்களுடையது... எவ்வளவு பஞ்சம் வந்தாலும், கிணத்துலே தண்ணி இருக்கும். ஆனா, நேற்று பார்த்தா, சுத்தமாக சொட்டு தண்ணி இல்ல. நீங்களே பாருங்க...' என்று இருவரும் கூறினர்.

கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான், நாடோடி. ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல், தரைப்பகுதி காய்ந்து போயிருந்தது.

'இதுவாவது பரவாயில்லீங்க... இன்னொரு விஷயத்தைச் சொன்னா நம்ப மாட்டீங்க...'

இருவரும் என்ன சொல்லப் போகின்றனர் என, எதிர்பார்த்து கொண்டிருந்தான், நாடோடி.

'அதோ... அங்கே இருக்கிறது எல்லாம் எங்க வயல்கள் தான்... அதுல உள்ள நெல் பயிருங்க, இந்நேரம் விளைஞ்சி அறுவடை ஆகி இருக்கணும்... ஆனா, இன்னும் கதிரே வரலை... பல மாதங்களாக வளராமல் அப்படியே நிக்குது...'

இருவரும் கூறியதைக் கேட்டு, 'இந்த ஊரில் மட்டும் ஏன் ஏதாவது வினோதம் நடக்கிறது...' என்று யோசித்தான், நாடோடி.

அன்று இரவு -

ஊரின் ஒரு பகுதியில் தங்கியிருந்தான், நாடோடி. அப்போது, திடீரென்று ஒரு யோசனை தோன்றியது.

தேவதையை அழைத்து, அன்று முழுதும் நடந்த விஷயங்களை தெரிவித்து, 'இவை உண்மையா, ஏன் இப்படி நடக்கின்றன...' என்று கேட்டான், நாடோடி.

'ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் கூறுகிறேன்... கேட்டுக் கொள். முதலில்... தங்க முட்டையிடும் அந்த கோழி, வேறொருவரிடம் இருந்தது. அதை, இந்த ஆள் திருடி வந்து விட்டான். அதனால் தான் கோழி, ஒரே ஒரு தங்க முட்டையை மட்டும் இட்டு, பின் நிறுத்திக் கொண்டது...

'அடுத்ததாக, அந்த மாடு, பூனையான கதை... மாட்டின் சொந்தக்காரன், சிலரிடம் கடன் வாங்கி இருந்தான். அவன் அதைத் திருப்பித் தராததால், கடன் கொடுத்தோர், அந்த மாட்டை விற்று கடனைத் திருப்பித் தரக் கேட்டனர்...

'அவர்களிடமிருந்து தப்பிக்கவும், மாட்டைக் காப்பாற்றவும் திட்டமிட்டான், கடன் வாங்கியவன். அருகில் உள்ள ஊரில் ஒருவரிடம் மாட்டை ஒப்படைத்து விட்டான். பின், அது பூனை ஆகிவிட்டதாக கட்டுக்கதையைச் சொல்லி, ஏமாற்றி நம்ப வைத்து கொண்டிருக்கிறான்...'

'அப்புறம் அந்த வீடு, காணாமல் போன கதை...' என கேட்டான் நாடோடி.

'அதை பற்றிச் சொல்கிறேன்... அந்த மனிதனுக்கு சொந்தமாக, வீடு கட்ட வேண்டும் என்று ஆசை. ஆனால், வீட்டைக் கட்டும் அளவு அவனிடம் வசதியில்லை. அதனால், புத்தி பேதலித்து, தன் நிலத்தைக் காட்டி, வீடு காணாமல் போய் விட்டதாக கூறிக் கொண்டிருக்கிறான்...'

'வழியில் சென்றவனை கேட்ட போது, அவனும் வீடு காணாமல் போய் விட்டதை உறுதி செய்வது போல் அல்லவா கூறினான்...'

'புத்தி பேதலித்து பேசுபவனிடம் மறுத்துப் பேசினால், தாக்கி விடக்கூடும் அல்லவா... அதனால் பயந்து, அந்த ஊர்க்காரர்கள், அவன் சொல்வதை ஆமோதிக்கின்றனர்...

'அந்த கிணறு, பயிர் விஷயம் பற்றிய கதையில், வயலுக்குச் சொந்தக்காரர், ஒரு துறவியை அவமதிச்சிட்டார். துறவி கோபத்தால் கொடுத்த சாபத்தின் விளைவாகவே இதுபோல் நடந்துருக்கு...' என விளக்கம் கொடுத்தது, தேவதை.

'ஓஹோ... அப்ப, அந்த நான்கு பேரில் மூன்று பேர், அவரவர் செய்த தவறான செயலின் விளைவாகத்தான் இவை நடந்துள்ளன...'

'ஆம்... அப்படித்தான்...'

யோசித்த நாடோடி, தேவதையிடம் ஒரு உதவி கேட்டான்.

'இந்த ஊரில் ஏழை வீடு கட்ட ஆசைப்பட்டுள்ளான். அது நிறைவேறாமல் போனது, அவன் தவறில்லை. அவனது நியாயமான ஆசையை நிறைவேற்ற விரும்புகிறேன். ஒரு வீட்டை உருவாக்கி கொடு...'

நாடோடியின் பரிந்துரையை ஏற்று, ஏழையின் நிலத்தில் அழகிய வீடு ஒன்றை அமைத்தது, தேவதை.

அதை ஏழைக்கு பரிசளித்தான், நாடோடி.

வீடு கட்டும் கனவை நிஜமாக்கிய, நாடோடிக்கு மனப்பூர்வமாக நன்றி சொன்னான், ஏழை.

வேலை முடிந்து விட்டதால், அந்த ஊரை விட்டுப் புறப்பட முடிவு செய்தான், நாடோடி.

புதிய ஊரில் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.



- தொடரும்...

- ஆர்.வி.பதி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us