PUBLISHED ON : ஜூலை 25, 2026

முன்கதை: தேவதையிடம் உதவும் வரம் பெற்றிருந்த நாடோடி, பிறர் பார்வையில் இருந்து மறைய மாய மோதிரம் ஒன்றும் வைத்திருந்தான். இவற்றை பயன்படுத்தி, மக்களுக்கு உதவியபடி ஊர் ஊராக சென்றான். புதிதாக வந்து சேர்ந்த ஊரில் சந்தித்த அனைவரும், வினோத நிகழ்வுகளை கூறினர். வியப்பு அடைந்த நாடோடி, அது குறித்து தேவதையிடம் தெளிவு பெற்று, ஏழை விவசாயிக்கு வீடு அமைத்து கொடுத்து பயணத்தை தொடர்ந்தான். இனி -
வினோத கிராமத்தில் இருந்து புறப்பட்டு, புதிய பகுதியை அடைந்தான், நாடோடி. அங்கு தென்பட்ட மரத்தின் அடியில், ஓய்வெடுக்க அமர்ந்தான். அது, பல்லவபுரம் நாடு என்பதை அறிந்து கொண்டான். இரண்டு நாட்கள் அங்கேயே சுற்றித் திரிந்தான். நாட்டு மன்னராக விஜயாலயன் இருக்கும் விபரத்தையும் அறிந்தான்.
சி ல நாட்களுக்கு பின் -
தன்னை யாரோ இருவர், பின்தொடர்ந்து வருவதை உணர்ந்தான், நாடோடி. சாலையில் நடந்தபடி சந்தேகம் வராமல் திரும்பிப் பார்த்தான். பின்தொடர்வதை உறுதி செய்து கொண்டான். சிறிது துாரம் நடந்து, ஒரு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்தான். அவனை பின்தொடர்ந்த இருவரும், அவனுக்கு எதிர்ப்புறம் திண்ணையில் அமர்ந்து நோட்டம் விட்டனர். பின்தொடர்ந்தோர் கவனிக்காத போது, மோதிரத்தை அணிந்து மாயமானான், நாடோடி.
எதிரில் அமர்ந்திருந்த நாடோடி, மாயமானதை கவனித்த இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
'என்னப்பா... அவனும் நம்மளை மாதிரி, வேற்று நாட்டு உளவாளியா இருப்பானோ... திடீர்னு காணாம போயிட்டானே...'
மாயமாய் மறைந்திருந்தாலும் அருகில், இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான், நாடோடி.
நாடோடி நினைத்தது சரி தான். இருவரும் சோழபுரம் நாட்டு உளவாளிகள். ஏதோ ஒரு காரியத்திற்காக இந்த நாட்டில் சுற்றிக் கொண்டிருப்பதை உறுதி செய்து கொண்டான்.
அப்போது இருவரும், 'பல்லவபுரம் நாட்டு மன்னர், அடிக்கடி மாறு வேஷத்தில் நகர்வலம் வருவார்ன்னு தெரிஞ்சிகிட்டோம். ஒருநாள், சமயம் பார்த்து அவரை, நம்ம நாட்டுக்கு கடத்தி போயிடணும். அதுக்குள்ளே, இப்ப நாம பார்த்த புதிய உளவாளி கடத்தி போயிட்டா என்ன செய்யறது...' என, பேசிக் கொண்டனர்.
இப்போது, நாடோடிக்கு விஷயம் தெளிவாகப் புரிந்தது.
பல்லவபுரம் மன்னர் விஜயாலயனுக்கு எந்நேரமும் ஆபத்து காத்திருக்கிறது. அவரை எச்சரித்து காப்பாற்றியாக வேண்டும் என்ற எண்ணம், நாடோடிக்கு ஏற்பட்டது.
மீண்டும் சாகசத்திற்கு தயாரானான், நாடோடி.
அன்று மாறுவேடத்தில் நகர்வலம் சென்று கொண்டிருந்தார், பல்லவபுரம் மன்னர் விஜயாலயன். இதை அறிந்து, அவரைப் பின்தொடர்ந்து, சமயம் பார்த்து பேசினான், நாடோடி.
'மன்னரே... சோழபுரம் நாட்டு உளவாளிகள் உங்களை கடத்திச் செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர். இனி, தனியாக இதுபோல நகர்வலம் வராதீர்கள்...'
'நீ யார்... உன்னைப் பார்த்தால் இந்த நாட்டுப் பிரஜை போலத் தெரியவில்லையே...'
'உண்மை தான் மன்னா. நான், ஒரு நாடோடி. சில நாட்களுக்கு முன், தங்கள் நாட்டில் முகாமிட்டிருக்கும் இரண்டு உளவாளிகளை சந்திக்க நேர்ந்தது. அவர்கள் பேசியதில் இருந்து இதை தெரிந்து கொண்டேன்...'
'உன்னை எப்படி நம்புவது...'
'மன்னா... நான் ஒரு சாதாரண நாடோடி. ஊர் ஊராகச் சுற்றுபவன். எனக்கு ஒரு நிரந்தரப் பெயர் கூட கிடையாது...'
யோசித்த மன்னர், 'சரி... என்ன செய்யலாம், நீயே சொல்...' என்றார்.
மன்னரிடம் ஒரு திட்டத்தைத் தெரிவித்தான், நாடோடி.
நாடோடியை நம்பி, அந்த திட்டத்திற்கு ஒப்புக் கொண்டார், மன்னர்.
மன்னருக்கு வேட்டையாடுவதில் மிகுந்த பிரியம் உண்டு.
தனியே சென்று வேட்டையாடவே விரும்புவார், மன்னர். வீரர்கள் புடைசூழ காட்டிற்குச் செல்வதில் அவருக்கு விருப்பமில்லை; அப்படி வேட்டையாடுவது வீரம் இல்லை என்பது, அவரது எண்ணம். அதன் அடிப்படையில் திட்டத்தை உருவாக்கினான், நாடோடி.
அன்று யாருக்கும் சந்தேகம் வராத வகையில், சாதாரண குதிரையின் மீது, சிப்பாய் போல அமர்ந்தார், மன்னர். உடைவாளுடன் வேட்டைக்குப் புறப்பட்டார். மன்னர் தனியாக செல்வதை தெரிந்து கொண்ட, சோழபுரம் நாட்டு உளவாளிகள் இருவரும் பின்தொடர்ந்தனர்.
காட்டிற்குள் வந்ததும் கடத்திச் செல்ல திட்டம் தீட்டினர். உடன் இருந்த ஒற்றன் மூலமாக, இந்த தகவலை சோழபுரம் நாட்டு மன்னருக்கு தெரிவித்திருந்தனர், அந்த உளவாளிகள்.
இதை அறியாதது போல் காட்டிற்குள் தனியே பயணித்துக் கொண்டிருந்தார், பல்லவபுரம் மன்னர் விஜயாலயன்.
- தொடரும்...
- ஆர்.வி.பதி
