தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நாடோடியின் சாகசங்கள்! (24)

நாடோடியின் சாகசங்கள்! (24)

நாடோடியின் சாகசங்கள்! (24)


PUBLISHED ON : ஆக 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: தேவதையிடம் உதவும் வரம் பெற்றிருந்த நாடோடி, பிறர் பார்வையில் இருந்து மறைய மாய மோதிரம் ஒன்றும் வைத்திருந்தான். இவற்றை பயன்படுத்தி, மக்களுக்கு உதவியபடி ஊர் ஊராக சென்றான். ஒரு ஊரில், ஏழை விவசாயிக்கு வீடு அமைத்து கொடுத்த பின், பயணத்தை தொடர்ந்து பல்லவபுரம் நாட்டை அடைந்தான் நாடோடி. சோழபுரம் நாட்டு உளவாளிகள், பல்லவபுரம் நாட்டு மன்னர் விஜயாலயனைக் கடத்தி செல்ல திட்டமிட்டிருந்ததை அறிந்து, மன்னரிடம் பேசி ஒரு திட்டத்தை வகுத்தான், நாடோடி. இனி -

விலங்குகளை வேட்டையாடும் ஆர்வத்தில், தனியாக நெடுந்துாரம் சென்று விட்டார், பல்லவபுரம் நாட்டு மன்னர் விஜயாலயன்.

அவரை பின் தொடர்ந்தனர் சோழபுரம் நாட்டு உளவாளிகள். திடீரென்று மன்னர் சென்ற குதிரையை வழி மறித்தனர். முன்புறம் ஒருவனும், பின்புறம் ஒருவனுமாக முற்றுகையிட்டு வாளை நீட்டியபடி, 'கீழே இறங்கு...' என, கட்டளையிட்டனர். வேறு வழியின்றி குதிரையில் இருந்து இறங்கினார், பல்லவபுரம் நாட்டு மன்னர். அவரது கண்களை கட்டி, அதே குதிரையில் அமர வைத்து, தங்கள் நாட்டுக்கு கடத்தி சென்றனர்.

ம று நாள் -

பல்லவரபும் நாட்டு மன்னர் விஜயாலயனை சிறை பிடித்து, சோழபுரம் நாட்டை சென்று சேர்ந்தனர், உளவாளிகள்.

சோழபுரம் நாட்டு மன்னர் மாறவர்மன், உளவாளிகளைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார்.

பின் அகங்காரத்துடன், 'பல்லவபுரம் நாட்டு மன்னர் விஜயாலயனே வருக... வருக... இனி, அதுவும் என் நாடாகி விட்டது. ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதால் சிறைக்குச் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்நேரம் என் தளபதி, பல்லவபுரம் நாட்டை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பார்...' என கொக்கரித்தார்.

அதைக் கேட்டு அமைதியாக நின்று கொண்டிருந்த, மன்னர் விஜயாலயன் உருவத்தில் இருந்த நாடோடி, திடீரென சுயரூபம் அடைந்தான்.

திடுக்கிட்ட சோழபுரம் நாட்டு மன்னர் மாறவர்மன், 'யார் நீ... எப்படி மன்னர் உருவத்தில் வந்தாய்...' என்று கேட்டு பரபரத்தார்.

'நான், ஒரு சாதாரண நாடோடி. உங்கள் சூழ்ச்சியை முறியடித்து, மன்னர் விஜயாலயனைக் காப்பாற்ற வந்துள்ளேன்...' என கூறி மாய மோதிரத்தை அணிந்து மாயமானான். பின், தேவதையை அழைத்தான், நாடோடி.

அங்கு தோன்றிய தேவதை, 'என்ன உதவி வேண்டும்...' என்றது.

'இரண்டு பெரும் படைகள் வேண்டும். ஒன்று, மன்னர் விஜயாலயன் நாட்டை முற்றுகை இட்டுள்ள சோழபுரம் நாட்டு தளபதி மற்றும் அவருடைய படையினரை சிறை பிடிக்க வேண்டும். மற்றொரு படையை கொண்டு, சோழபுரம் மன்னர் மாறவர்மனை சிறை பிடிக்க வேண்டும்...' என்றான் நாடோடி.

அடுத்த நொடியில், இரண்டு பெரும் படைகள் அணி வகுத்தன. இரு படைகளையும் எவராலும் சமாளிக்க முடியவில்லை.

பல்லவபுரத்தில், சோழபுரம் தளபதி மற்றும் அவருடன் சென்ற படைவீரர்கள் சிறை வைக்கப்பட்டனர். சோழபுரத்தில், மன்னர் மாறவர்மனின் படை தோற்கடிக்கப்பட்டது. மாறவர்மன் சிறை வைக்கப்பட்டார்.

ப ல்லவபுரம் நாட்டு மன்னர் விஜயாலயனின் கட்டுப்பாட்டிற்குள், சோழபுரம் வந்தது.

மன்னர் விஜயாலயனை நாடோடி முன்பு சந்தித்துப் பேசிய போது, சிறிது காலம் யார் கண்ணிலும் படாமல் மறைந்திருக்க கூறியிருந்தான். அத்துடன் ஒரு திட்டத்தையும் வகுத்து, மன்னர் விஜயாலயன் உருவத்திற்கு மாறியிருந்தான், நாடோடி.

இதை அறியாத சோழபுரம் நாட்டு உளவாளிகள், நாடோடியை உண்மையான மன்னர் என்றெண்ணி, கடத்திச் சென்றனர். அனைத்தையும் புரிய வைத்தால் தான், வரும் காலத்தில், மன்னர் விஜயாலயன் எச்சரிக்கையுடன் செயல்படுவார் என முடிவு செய்தே, இத்தகைய சாகசத்தை செய்தான், நாடோடி.

இதை உணர்ந்து மன்னர் விஜயாலயன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். நாடோடியைப் பாராட்டி, அமைச்சரவையில் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

இதையெல்லாம் விரும்பாத நாடோடி, மன்னரிடம் தன் நிலையை தெரிவித்தான். இரண்டொரு தினங்களில் புறப்படுவதாக கூறினான்.

'நீ தக்க சமயத்தில் உதவவில்லை என்றால், இந்நேரம் சோழபுரம் நாட்டில் ஒரு கைதியாக சிறை வைக்கப்பட்டு இருப்பேன். என் நாடு, உனக்கு பெரும் கடமைப்பட்டுள்ளது. எந்த நேரத்தில் என்ன உதவி தேவைப்பட்டாலும் செய்யத் தயாராய் இருக்கிறேன்...' என உருக்கமுடன் தெரிவித்தார், மன்னர் விஜயாலயன்.

அவருக்கு நன்றி தெரிவித்தான், நாடோடி. அடுத்த சில நாட்களில், அந்த நாட்டை விட்டுப் புறப்பட்டான்.

மன்னர் மற்றும் அமைச்சர்கள், நாடோடியை மிக்க மரியாதையோடு வழியனுப்பி வைத்தனர்.

வழக்கமான பயணத்தைத் தொடர்ந்தான், நாடோடி.

வ ழியில் பெரிய அருவியைக் கண்டான். அதன் அருகில் யானைகள், ஆனந்தமாகக் குளித்துக் கொண்டிருந்தன. அவனும் களைப்பு தீரக் குளித்தான்.

குளித்து முடித்து புறப்பட்ட போது, அந்த பகுதியில் பெரிய குகை இருப்பதைக் கண்டான். அதை நோக்கி நடந்து, உள்ளே நுழைந்தான்.

அப்போது, ஒரு அதிர்ச்சி நாடோடிக்கு காத்திருந்தது.



- தொடரும்...

- ஆர்.வி. பதி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us