PUBLISHED ON : ஆக 08, 2026

முன்கதை: தேவதையிடம் உதவும் வரம் பெற்றிருந்த நாடோடி, பிறர் பார்வையில் இருந்து மறைய மாய மோதிரம் ஒன்றும் வைத்திருந்தான். இவற்றை பயன்படுத்தி, மக்களுக்கு உதவியபடி ஊர் ஊராக சுற்றித்திரிந்து, பல்லவபுரம் நாட்டை அடைந்தான், நாடோடி. சோழபுரம் நாட்டு உளவாளிகள், பல்லவபுரம் நாட்டு மன்னர் விஜயாலயனை கடத்தி செல்ல திட்டமிட்டிருந்ததை அறிந்தான். ஒரு திட்டத்தை வகுத்து பல்லவபுரம் மன்னரை காப்பாற்றிய பின், ஒரு குகையை கண்டான், நாடோடி. இனி -
குகை மிகப் பெரியதாய் இருந்தது. அதற்குள் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்பினான், நாடோடி.
சிறிது துாரம் நடந்ததும், ஒரு வழி தெரிந்தது. அதில் நுழைந்து பார்த்தவன், அதிர்ந்து போனான்.
அங்கே, பெரிய கடல் தென்ப ட்டது. அதில் மிதந்து கொண்டிருந்தது, ஒரு அழகிய படகு. அது நாடோடியை நோக்கி வந்தது.
தன்னிச்சையாக அந்த படகில் ஏறி அமர்ந்தான் நாடோடி. உடனே பயணத்தை துவங்கியது, படகு. சிறிது துாரம் சென்றதும், கடலுக்குள் மூழ்க துவங்கியது. ஆனால், நாடோடிக்கு எதுவும் ஆகவில்லை.
க டலுக்குள் பெரிய வினோதமான உயிரினங்களை பார்த்து ரசித்தபடி, பயணத்தை தொடர்ந்தான்.
கடலின் தரைப்பகுதியில் ஒரு மாளிகைக்குள் நுழைந்தது, படகு.
மு த்து, ரத்தினம், மரகதம், கோமேதகம், பவளம் போன்ற விலையுயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த மாளிகை. மிகவும் வினோதமாகவும், ஆச்சரியப்படும் வகையிலும் அமைந்திருந்தது, கடல் மாளிகை.
அங்கு, தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்த கடல் இளவரசியைக் கண்டான், நாடோடி.
நாடோடியை கண்டதும் கனிவுடன் வரவேற்ற கடல் இளவரசி, 'வாருங்கள், சாகசங்கள் செய்த நாடோடியே... எங்கள் உலகிற்கு வரவேற்கிறோம். எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும், என் விருந்தாளியாகத் தங்கலாம். இந்த கடலுக்குள் இருக்கும் அரிய பொக்கிஷங்களை கண்டு மகிழலாம்; வியக்கலாம்...' என மகிழ்ச்சி பொங்க கூறினாள்.
'நன்றி இளவரசியே... ஆனால், நான், இன்று மட்டும் இங்கே சுற்றிப் பார்த்து விட்டு, செல்ல விரும்புகிறேன். உலகத்தில் சுற்றிப் பார்க்க, நிறைய இடங்கள் உள்ளன...' என்றான் நாடோடி.
'தங்கள் விருப்பப்படியே ஆகட்டும்...'
கடல் இளவரசி, கை தட்டியதும், தங்கத் தட்டில் அழகிய முத்துமாலை ஒன்றை எடுத்து வந்து நீட்டினாள், பணிப்பெண். அதை நாடோடிக்குப் பரிசளித்தாள், கடல் இளவரசி.
'இது, சாதாரண முத்துமாலை அல்ல. இது, உங்களுடைய பயணத்தில் உதவிகள் பல செய்யும் அதிசய முத்துமாலை. எங்கள் ராஜ்ஜியத்தின் சார்பாக, இதை பரிசளித்து மகிழ்கிறேன். பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்...'
கடல் இளவரசி அளித்த முத்து மாலையை, மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டான், நாடோடி.
'இன்னொரு முக்கியமான விஷயம். இந்த அபூர்வ சக்தி படைத்த முத்துமாலை, உங்களிடம் வந்து விட்டதால், இதற்கு முன் நீங்கள் பெற்று உபயோகித்த மூன்று சக்திகளும், இனி செயலிழந்து விடும்...'
எல்லாம் தானாக நடைபெற்றதால், நாடோடியால் எதுவும் செய்ய முடியவில்லை.
அ ன்று முழுவதும், படகில் கடலுக்குள் பல இடங்களுக்கும் சென்று சுற்றி பார்த்தான். பவளப்பாறைகள், ஆக்டோபஸ், நட்சத்திர மீன்கள் என, பல வினோ த உயிரினங்களைக் கண்டு மகிழ்ந்தான்.
ஒ ரு கட்டத்தில், தன் நாட்டிற்குத் திரும்ப நினைத்தான், நாடோடி.
உடனே, குகைப் பகுதியின் வாசலில் கொண்டு வந்து இறக்கி விட்டது, படகு.
குகையில் இருந்து வெளியேறினான், நாடோடி. முன், தான் குளித்து மகிழ்ந்த நீர் வீழ்ச்சி தெரிந்தது.
மீண்டும் ஒருமுறை அங்கு சென்று குளித்து, களைப்பை போக்கிக் கொண்டான்.
கடல் இளவரசி சொன்ன விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.
அது, உண்மை தானா என சோதித்துப் பார்க்க, தேவதையை அழைத்தான்; ஆனால், தேவதை வரவில்லை.
தான் ஒரு பூனையாக மாற வேண்டும் என்று நினைத்தான்; அதுவும் நடக்கவில்லை. மாய மோதிரத்தின் சக்தியை சோதிக்க விரும்பி, அதை எடுக்க முயற்சி செய்தான்; ஆனால், அதை காணவில்லை.
கடல் இளவரசி பரிசாக தந்த முத்துமாலை, நாடோடி கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.
'இது, என்ன உதவி செய்யும் என்பதை, பின்னர் பார்த்துக் கொள்ளலாம்...' என எண்ணியபடி நடந்தான் நாடோடி.
தேவதை, மாயமோதிரம், நினைத்த உருவத்தை அடையும் சக்தி என, மூன்றையும் அந்த முத்துமாலை செய்யும் என்பது, நாடோடிக்கு அப்போது தெரியாது. சந்தர்ப்பம் வரும் போது பயன்படுத்திக் கொள்ள இருந்தான்.
சாகசங்களை நிகழ்த்தும் வகையில் புதிய பயணத்தைத் தொடர்ந்தான், நாடோடி.
- முற்றும்.
- ஆர்.வி.பதி
