
தேனி மாவட்டம், வடுகபட்டி, ஸ்ரீமார்க்கண்டேயா நெசவாளர் நடுநிலைப் பள்ளியில், 1995ல், 6ம் வகுப்பு படித்தேன். அப்போது, தமிழாசிரியராக பணியில் சேர்ந்தார், சு.தங்கவேல். அவர், நகைச்சுவையோடு கதை கூறுவதில் வல்லவர்.
செய்யுள் வழி கதைகள் எனில், கதை மாந்தர்களின் பெயர்களுக்கு பதிலாக, வகுப்பு மாணவ - - மாணவியரின் பெயரை சொல்லி, பாடத்தை துவக்குவார். மாணவர்களின் பெயரை சொன்னவுடன், மற்ற மாணவர்களும் சுறுசுறுப்பாக கவனிப்பர். பாடம் இடைநில்லாமல் இருக்க, இவர் பயன்படுத்தும் யுக்தியே தனி தான்.
ஒருநாள், இலக்கண பாட வகுப்பின் போது, ராமன் என்ற மாணவன் பேசி கொண்டிருந்தான். அவனை பார்த்து, 'ராமன், பாட்டியை மணந்தான்...' என்றார், தமிழாசிரியர். அனைவரும், 'கொல்' என சிரிக்க, அடுத்த நொடியே, 'ராமன், சீதா பிராட்டியாரை மணந்தான்...' என்று கூறி, பாட்டிக்கும், பிராட்டிக்கும் இடையில் உள்ள வித்தியாசம் குறித்து விளக்கம் அளித்தார்.
பாடம் நகைச்சுவையோடும், தொய்வின்றியும் சென்றது. மேலும், 'பாட்டி -- பிராட்டி' விளக்கம் அளித்த முறை, இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது.
தற்போது, எனக்கு வயது, 41. காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில், தமிழாசிரியையாக பணிபுரிகிறேன். என் தமிழாசிரியர் யுக்திகளை நானும் பின்பற்றி வருவதில், பெருமிதம் கொள்கிறேன்.
என் தமிழாசிரியர், 30 ஆண்டுகளுக்கு மேலாக அதே பள்ளியில் இப்போதும் பணிபுரிவது, அவருக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்க்கிறது.
- ப.ஜோதிமணி, காரைக்குடி.தொடர்புக்கு: 90256 76616

