PUBLISHED ON : ஆக 29, 2026

பெங்களூரு, ஆர்.டி.சி., பெண்கள் மேல்நிலை பள்ளியில், 1983ல், 10ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...
மாற்றுத்திறனாளியான எனக்கு தமிழ் மொழி மீது தனித்த ஆர்வம் இருந்தது. தமிழாசிரியர் தனபாலன் மிகவும் கண்டிப்பானவர். தேர்வுகள் முடிந்து விடைத்தாளை திருத்திய பின், மாணவ - மாணவியரை பெயர் சொல்லி அழைத்து, பிழைகளை சுட்டிக் காட்டுவார்.
தவறாக இருந்தால் பிரம்பால் அடிக்கவும் செய்வார். நல்ல பெயர் வாங்கும் வகையில் கவனம் செலுத்தி படித்தேன்.
ஒருமுறை, விடைத்தாள் திருத்திய உடன், 'சாந்தி...' என, அழைத்ததும் நடுங்கியபடி பார்த்தேன். நான் எழுதியிருந்ததை உரக்க வாசித்த பின், 'உனக்கு கவிதை நடையில் சிறப்பாக எழுத வருகிறது. எதிர்காலத்தில் நன்றாக வருவாய்...' என பாராட்டினார் தமிழாசிரியர். மிகப்பெரிய விருது கிடைத்தது போன்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.
அதை வேத வாக்காக எடுத்து, தொடர்ந்து இதழ்களுக்கு படைப்புகள் எழுதி வருகிறேன். அவற்றுக்காக பரிசுகளும் பெற்றுள்ளேன். உடலில் ஊனம் இருந்தாலும் உட்கார்ந்தபடியே சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளேன்.
என் வயது 62; இல்லத்தரசியாக இருக்கிறேன். உயர்வுக்கு ஊக்கம் தந்து வாழ்வுக்கு வழிகாட்டிய தமிழாசிரியர் தனபாலன் நினைவை நெஞ்சில் சுமந்து வாழ்கிறேன்.
- ஏ.சாந்தி, பெங்களூரு.
தொடர்புக்கு: 98445 92302
