
சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில், 2012ல் துவக்கப்பட்ட அப்பு அறிவாலயம் என்ற மத்திய இடைநிலைப் பள்ளியில், 6ம் வகுப்பில் சேர்ந்தேன். எங்கள் பள்ளியின் பொறுப்பாசிரியராக இருந்தவர், விஜயகுமார். ஆங்கிலப்பாடமும் அவர் தான் கற்பிப்பார்.
செடிகளை பராமரிப்பது, வாழ்க்கை கல்வி, மேடை பேச்சு, படித்தல், எழுதும் திறனை ஊக்குவிக்கும் வகுப்பு போன்ற பல்வேறு புதிய திட்டங்களை கொண்டுவந்தார். ஒவ்வொரு மாணவரிடமும் தனிக்கவனம் செலுத்தி பேச்சு, இசை, நடனம் போன்ற தனித்திறன்களை மெருகேற்றினார்.
பள்ளியில் முதல் முறையாக, பேச்சு போட்டிக்கு ஆள் தேர்வு நடந்தது. நானும் பேசிக்காட்டினேன். நான், அதில் தேர்வாகவில்லை. இதனால், அன்று முழுவதும் அழுது கொண்டே இருந்தேன். 'நமக்கு எதுவும் வராது; வீண் முயற்சியில் ஈடுபடக்கூடாது' என்று நினைத்து, வருந்திக் கொண்டிருந்தேன்.
அந்த ஆண்டு இறுதியில், எங்கள் பள்ளியில் ஆங்கில பேச்சு போட்டி அறிவிக்கப்பட்டது. அதை நான் கண்டு கொள்ளவில்லை. பொறுப்பாசிரியர் விஜயகுமார், என்னை அழைத்து அதில் பங்கேற்க சொன்னார். ஆங்கில பேச்சை, அவரே தயார் செய்து கொடுத்தார். 'வீட்டிலேயே பயிற்சி எடுத்து வந்து பேசு...' என்று, நம்பிக்கையை விதைத்தார். 'நம்மை இவ்வளவு நம்புகிறாரே...' என்று, வீட்டில் தீவிரமாக பயிற்சி எடுத்தேன்.
பேச்சு போட்டியில் பங்கேற்று, மேடையில் இருந்து இறங்கும் போதே, ஆசிரியர்கள் அனைவரும் வந்து பாராட்டினர். என் கண்களில் அப்போது ஆனந்த கண்ணீர் ததும்பியது.
தற்போது என் வயது, 24. அந்த வகுப்பில் படித்த நாங்கள் அனைவரும், தற்போது பொறுப்பான பணியில் உள்ளோம். களிமண்ணை சிலையாக்கும் யுக்தி, ஆசிரியர்களுக்கே உரித்தான திறமை என்பதற்கு இலக்கணமாக இருக்கும் பொறுப்பாசிரியர் விஜயகுமாருக்கு என் வணக்கங்கள்.
- ம.தினோவிகா, சேலம். தொடர்புக்கு: 80980 87717

