PUBLISHED ON : செப் 12, 2026

மதுரை, நாகமலை புதுக்கோட்டை சிறுமலர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1981ல், 10ம் வகுப்பு படித்த போது, தமிழாசிரியையாக இருந்தார், ரோஸ்மேரி. கையெழுத்து சிறப்பாக அமைய, பயற்சி ஏட்டை வீட்டுப் பாடமாக எழுதி வர கூறுவார். எழுதியதை ஒவ்வொரு மேஜை ஓரத்திலும் திறந்த நிலையில் அடுக்கியிருக்க வேண்டும். வகுப்பு துவங்கியதும் அதை திருத்தி அழகாக எழுதியிருந்தால், 'நன்று' என குறிப்பு எழுதுவார்.
அன்று, ப யற்சி ஏட்டில், திரைப்படப் பாடலில் முன் விருத்தமாக அமைந்திருந்த, 'வார்த்தை தவறிவிட்டால் கண்ணம்மா, மார்பு துடிக்குதடி; பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி...' என்ற பாடல் வரிகளை எழுதி இருந்தேன். நன்று என்ற குறிப்பு கிடைத்தது. அதை மாணவியரிடம் காட்டி, பெருமை அடித்து கொண்டேன். அது போல் பிற மாணவியரும் சினிமா பாடல்கள் எழுத துவங்கி விட்டனர். விஷயத்தை ஆசிரியையிடம் போட்டுக் கொடுத்து விட்டாள், வகுப்பு தலைவி.
சினிமா பாடல் எழுதியிருந்தோரை தனியாக நிறுத்தி, 'கோமதி எழுதியிருந்தது, மகாகவி பாரதியின் கவிதை வரிகள்...' என எடுத்து உரைத்து, 'பயிற்சியில் சினிமா பாடல் எழுதக் கூடாது...' என அறிவுறுத்தினார் தமிழாசிரியை. என் தவறு, பிற மாணவியரை தண்டனை பெற வைத்ததை எண்ணி, குற்ற உ ணர்வு அடைந்தேன்.
தற்போது என் வயது, 60. அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். முத்து போன்ற கையெழுத்திற்கு வித்திட்ட தமிழாசிரியை ரோஸ்மேரியை நினைவில் கொண்டுள்ளேன்.
- கு.கோமதி, சென்னை. தொடர்புக்கு: 94448 82024
