
புதுக்கோட்டை மாவட்டம், ராயவரம் சு.கதி.காந்தி உயர்நிலைப் பள்ளியில், 2005ல் 10ம் வகுப்பு படித்தேன். சமூக அறிவியல் ஆசிரியாக இருந்த ராமு, நல்லாசிரியர் விருது பெற்றவர். பொது தேர்வுக்கு எங்களை தயார் படுத்த கடும் முயற்சி எடுத்தார்.
ஒவ்வொரு பாடத்தையும் நடத்தியவுடன் அதில் எப்படி எல்லாம் ஒரு மதிப்பெண் வினா கேட்கப்படும் என பட்டியலிடுவார். வகுப்பின் இறுதியில் ஒவ்வொருவரையும் அந்த வினா - விடையை படிக்க வைத்தார். அவை மனதில் நன்கு பதிந்தன. பிற மாணவர்கள் வாசித்ததையும் கேட்டதால் தெளிவு ஏற்பட்டது.
பின், மாணவர்களை குழுக்களாக பிரித்தார். அவற்றுக்கு நன்றாகப் படிப்போரை தலைவராக்கினார். ஓரளவு படிப்போர், குறைந்த கற்றல் திறன் உடையோரை கலவையாக்கி பயிற்சியை ஊக்குவித்தார். ஒவ்வொரு வாரமும் அலகுத்தேர்வு நடத்தி குழுக்கள் பெற்ற மதிப்பெண்ணை மதிப்பிடுவார்.
கரும்பலகையின் ஓரத்தில், 'நன்மதிப்பு பலகை' என ஒன்றை உருவாக்கி அதை காட்சி படுத்துவார். முதல் மூன்று இடங்களை பிடிக்கும் குழுக்களை பாராட்டுவார். கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்துவார். குறைந்த மதிப்பெண் பெற்ற குழுவையும் உதாசீனப்படுத்தமாட்டார். நம்பிக்கை ஊட்டும் வகையில் அறிவுரை கூறி ஊக்குவிப்பார்.
இது வகுப்பில் குழுவாக இணைந்து படித்து முன்னேறும் எண்ணத்தை வளர்தது. கடைநிலையில் இருந்தோரும் முயன்று படித்து முன்னேறினர். இது போன்று ஊக்கப்படுத்தியதால் பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் பள்ளி அளவில் முதன்மை மதிப்பெண் பெற்றேன். ஆசிரியர் தந்த அறிவுரையை மனதில் கொண்டு கிடைக்கும் நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்தி முன்னேறி வருகிறேன்.
என் வயது, 35; சிறுவர் இதழ்களில் கதை, கட்டுரைகள் எழுதி வருகிறேன். பள்ளி பருவத்தில் படிக்கும் ஆர்வத்தை ஊட்டி, உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர் ராமுவை வணங்கி மகிழ்கிறேன்.
- தி.மங்கையர்க்கரசி, சென்னை.