PUBLISHED ON : அக் 10, 2026

நவராத்திரி விழா நாட்களில் வீட்டில் கொலு ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கும். வண்ண பொம்மைகள் எல்லாம் கவர்ந்திழுக்கும். காலை, மாலையில் பூஜை, சுண்டல், சர்க்கரை பொங்கல், இனிப்பு வகைகள், உறவினர், நண்பர் வருகை என, வீடே அமர்க்களப்படும்.
குதுாகலம் மிக்க நவராத்திரி புராண வரலாறு பற்றி தெரிந்து கொள்வோம்...
பஞ்சாப் மாநிலத்தை புராண காலத்தில், மத்ர நாடு என்று அழைத்தனர். அங்கு, அசுர குலத்தைச் சேர்ந்த, தனு என்பவன் வசித்தான். அவனுக்கு ரம்பன், கரம்பன் என்ற பிள்ளைகள். இருவருக்கும் வாரிசு இல்லை. கங்கை நதியில், சிவனை எண்ணி குழந்தை வரம் கேட்டு தவமிருந்தனர். தேவர்களின் தலைவன் இந்திரன், முதலை வடிவம் எடுத்தான். இருவரையும் விழுங்க முயன்றான்.
கரம்பனை விழுங்கியது முதலை. சகோதரனை இழந்த துக்கத்தில் தற்கொலைக்கு முயன்றான், ரம்பன். நெருப்புக் கடவுளான அக்னி தேவன் காப்பாற்றி, 'நீ தவத்தை தொடர்ந்து செய்து முடித்து கண் திறந்ததும், பெண் வடிவில் எந்த உயிரைப் பார்த்தாலும் சரி, அதன் மூலம் குழந்தை பிறக்கும்...' என, வரம் அளித்தார்.
ரம்பன் கண் திறந்த போது, ஒரு பெண் எருமை கண்ணில் பட்டது. அதை, 'மகிஷி' என்பர். அது, எருமை முகமும், மனித உடலும் உடைய குழந்தையை பெற்றது. குழந்தைக்கு மகிஷாசுரன் என, பெயர் வைத்தனர். அவனும் கடும் தவமிருந்து, ஒரு பெண்ணால் மட்டுமே தன்னைக் கொல்ல முடியும் என்ற வரம் பெற்றான்.
அந்த தைரியத்தில், தேவர்களை அடிமைப்படுத்தினான். தங்களை மீட்க வேண்டும் என தேவர்கள், பார்வதி தேவியிடம் வேண்டினர். அவள், துர்க்கையாக வடிவெடுத்து, மகிஷாசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டு ஆணவத்தை அடக்கினாள். தேவர்கள் தப்பினர்.
இதனால், அம்பாளை மகிஷாசுரமர்த்தினி என அழைத்தனர். ஒன்பதை, 'நவம்' என்பர். இதனால் அந்த இரவுகளின் தொகுப்பே நவராத்திரி.
கோவில்களில், எருமையை மிதித்தபடி நிற்கும் மகிஷாசுரமர்த்தினியைக் காணலாம். 'மர்த்தினி' என்றால் அழிப்பவள் என பொருள். மகிஷன் ஆணவத்தை அழித்தவள். ஆணவம் யாருக்கும் வரக்கூடாது. தெய்வமே உயர்ந்தது என்ற நிலை வந்து விட்டால், சண்டை சச்சரவுக்கே இடம் இருக்காது. நவராத்திரி பண்டிகை கற்றுத்தரும் பாடம் இது தான்.
- தி.செல்லப்பா
