PUBLISHED ON : டிச 20, 2025

பள்ளிக்கு செல்ல முடியாமல் ஐந்து ஆண்டு இடைமுறிவுக்கு பின், கோவை மாவட்டம், லட்சுநாயக்கன் பாளையம் எஸ்.ஆர்.என்.,வித்யாலயா பள்ளியில், 1963-ல், 9ம் வகுப்பில் சேர்ந்தேன். அப்போது என் வயது, 18.அறிவியல் ஆசிரியராகவும், என்.சி.சி., எனும் தேசிய மாணவர் படையின் அதிகாரியாகவும் இருந்தவர், ஆர்.ரங்கசாமி. அப்போது, அவர் வயது, 30. நல்லாசிரியர் பண்புகள் அனைத்தும் பெற்றவர். அச்சம், தாழ்வு மனப்பான்மையுடன் இருந்த என்னை, என்.சி.சி.,யில் சேருமாறு கூறி, பயிற்சி மாணவர்களின் வரிசையில் நிற்கச் சொன்னார்.
வரிசையில் நிற்கக்கூட தயங்கிய என்னை, அதில் பங்கேற்க உற்சாகப்படுத்தி, அப்பயிற்சியில் ஈடுபடுத்தினார். என்னிடம் இருந்த கூச்சமும், தாழ்வு மனப்பான்மையும் படிப்படியாக நீங்கியது. அவர் தந்த ஊக்கம், உற்சாகம் காரணமாக, பள்ளி இறுதித் தேர்வின் போது, தேசிய மாணவர் படையில் தலைமை பொறுப்பிலும், பள்ளி மாணவர் தலைவனாகவும் செயல்பட்டேன்.
பின், கல்லுாரியில் சேர்ந்து, பட்டதாரி ஆனேன். தமிழக அரசின் தலைமை செயலகம், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தஞ்சை தமிழ் பல்கலை கழகம், கல்லுாரி கல்வி துறையிலும் பல்வேறுபட்ட பணிநிலைகளில் பணியாற்றி, 2003-ல் ஓய்வு பெற்றேன்.
பணி ஓய்வுக்கு பிறகும் டி.லிட்., எனும் முதுமுனைவர் பட்டம் பெறும் பொருட்டு, ஆய்வு செய்தேன். அதிலும் வெற்றி பெற்றேன். குன்னுாரில் அறிவியல் ஆசிரியர் ரங்கசாமி தங்கியிருந்ததை அறிந்து, நண்பர்களுடன் சென்று பார்த்து, வணங்கி, அவரது ஆசியை பெற்றேன்.
தற்போது என் வயது, 80; ஆசிரியரின் வயது, 92. நல்வழிகாட்டிய பெருந்தகையாளர் ஆசிரியர் ரங்கசாமியை நன்றி உணர்வுடன், நினைத்து மகிழ்கிறேன்.
- சி.பி.கோபால், கோவை.
தொடர்புக்கு: 99420 55482

