PUBLISHED ON : அக் 03, 2026

தென்காசி மாவட்டம், அச்சன்புதுார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 2005ல், 9ம் வகுப்பு படித்தபோது, அறிவியல் ஆசிரியராக இருந்தார் மு.முருகேசன். நகைச்சுவையுடன் பாடங்களை நடத்தி எளிதாக மனதில் பதிய வைப்பார். நல்வாழ்வுக்கு அக்கறையுடன் ஆலோசனைகளும் வழங்குவார்.
அன்று காலை பள்ளிக்கு வர தாமதமாகி விட்டது. இறைவணக்க கூட்டம் நடந்து கொண்டிருந்தது. முன் வாயில் மூடப்பட்டிருந்ததால் தாமதமாக வந்தோருடன் வெளியில் நின்றிருந்தேன். ஒவ்வொருவரிடமும் பெயர், வகுப்பு விபரம் கேட்டு, 'இனி நேரங்கடந்து வந்தால், கூடுதலாக தண்டனை கிடைக்கும்...' என, கண்டிப்புடன் எச்சரித்து பிரம்பால் அடித்து, வளாகத்துக்குள் அனுப்பிக் கொண்டிருந்தார், அறிவியல் ஆசிரியர்.
என் பெயரைக் கேட்டதும், 'ஓரமாக போய் நில்...' என்றார். எதுவும் புரியாததால் பயம் அதிகமாகி விட்டது. இறைவணக்க கூட்டம் முடிந்ததும் அழைத்து சென்று மேடையில் நிறுத்தி, 'இந்த மாணவர் வரைந்த ஓவியம், ஒரு இதழில் பிரசுரமாகியுள்ளது. அவனது முயற்சியை ஊக்குவித்து பாராட்டும் வகையில் கர ஒலி எழுப்புங்கள்...' என அறிவித்தார், அறிவியல் ஆசிரியர்.
எதிர்பாராத மகிழ்ச்சியால் திக்குமுக்காடிப் போனேன். எனக்கு 32 வயதாகிறது. வெல்டிங் மெக்கானிக்காக பணிபுரிகிறேன். பள்ளி வளாகத்தில் வாழ்வில் மறக்க இயலாத தருணத்தை உருவாக்கிய அறிவியல் ஆசிரியர் மு.முருகேசனை நன்றியுடன் போற்றுகிறேன்.
- பா.முருகன், தென்காசி.தொடர்புக்கு: 81244 59881
