
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, எம்.என்.குப்பம்ஆரம்ப தொடக்கப் பள்ளியில் 1968ல், 4ம் வகுப்பு படித்தேன். எனக்கு வகுப்பு ஆசிரியையாக இருந்தவர், மேரி சாமுவல். மிகவும் அன்பானவர்.
பள்ளியில் ஆசிரியர்களுக்கு மாத இறுதியில் சம்பளம் வழங்கப்படும். சம்பளம் வாங்கும் நாளில், அதை தன் இருக்கையில் அமர்ந்து எண்ணிப் பார்ப்பார், வகுப்பு ஆசிரியை மேரி சாமுவல். இதை, அவருடைய மேஜை அருகே நின்று, வேடிக்கை பார்ப்பேன். அதற்கு காரணம் உண்டு. ஐந்து ரூபாய் நோட்டுக்கள் புத்தம் புதுசாக, வாசனையுடன் இருக்கும். அதில், 450 ரூபாய் இருக்கும்.
ஒருமுறை அவர் சம்பளத்தை எண்ணி முடித்த பின், என்னிடம் தந்து மீண்டும் எண்ணிப் பார்க்க சொன்னார். அது, எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. 'நீ நன்றாக படித்தால், இதைப் போல, நுாறு மடங்கு சம்பாதிக்கலாம்...' என்று கூறி, என்னை ஆசிர்வதித்தார்.
அவர் கூறியது போலவே, நன்றாக படித்து, சென்னை, பல்லாவரத்தில், மின்னணு நிறுவனத்தில் பணிபுரிந்தேன். ஆசிரியை மேரி சாமுவல் கூறியது போலவே, நுாறு மடங்கிற்கு மேல் ஊதியம் பெற்று, 2017ல் ஓய்வு பெற்றேன். தற்போது என் வயது, 76.
நன்றாகப் படித்தால், நல்ல பணியில் சேர்ந்து நிறைய சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்திற்கு அடித்தளம் அமைத்த, ஆசிரியை மேரி சாமுவலை, நன்றியுடன் மனதில் நிறுத்தி வணங்கி மகிழ்கிறேன்.
- வி.ராமன், காஞ்சிபுரம்.தொடர்புக்கு: 94430 68414

