
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 1986ல், 6ம் வகுப்பு படித்தேன். எங்களின் கணித ஆசிரியராக இருந்தவர், ரகோத்தமன்.
அவர் கணிதப்பாடத்தை கற்றுக் கொடுத்த விதம், சில மாணவர்களுக்கு புரியவில்லை. அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து, விடைத்தாள்களை கொடுத்தனர். கணிதத் தேர்வில் பல மாணவ, மாணவியர் 30 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்று, பெயிலாகி இருந்தனர். ஆனால், நான் நுாற்றுக்கு, 90 மதிப்பெண் பெற்றிருந்தேன். என்னைப் போலவே மேலும் சிலர், 80 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றிருந்தனர்.
மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை சுட்டிக்காட்டி, அவரை கண்டித்த தலைமை ஆசிரியர், கணிதம் கற்றுத்தருவதில் குறைபாடு இருப்பதாக குற்றம்சாட்டினார். ஆனால், நானும், மற்ற சில மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெற்றதை சுட்டிக்காட்டி, குற்றச்சாட்டை ஆசிரியர் ரகோத்தமன் மறுத்தார்.
அதைத் தொடர்ந்து, மதிப்பெண் குறைவாக பெற்றிருந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்தார். சந்தேகங்களுக்கு சலிப்பின்றி விடை அளித்தார். அதிக மதிப்பெண் பெற்ற நானும் அவர்களுக்கு உதவினேன். அந்த ஆண்டு, கணித பாடத்தில் மாணவர்கள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
தற்போது என் வயது, 50. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன். என்னை எந்த இடத்தில் பார்த்தாலும், அன்புடன் நலம் விசாரித்து, இக்கட்டான சூழலிலிருந்த போது உதவியது குறித்து, கணித ஆசிரியர் ரகோத்தமன் பெருமையாக பேசுவார்.
அவர் சமீபத்தில் மறைந்தாலும், அவர் காட்டிய வழியில் என் வகுப்பு மாணவர்களையும் நுாறு சதவீத தேர்ச்சி அடைய வைக்க உழைக்கிறேன். என் மாணவர்களின் தேர்ச்சியை அவருக்கு காணிக்கையாக்குகிறேன்.
- என்.ஹேமலதா, ராமநாதபுரம்.
தொடர்புக்கு: 96591 65566

