PUBLISHED ON : ஜன 03, 2026

சென்னை, வடக்கு தி.நகர், பசுல்லா சாலையில் உள்ள, ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில், 1967ல், 7ம்வகுப்பு படித்தேன். எங்களின் வகுப்பு ஆசிரியராக இருந்தவர், ராஜாமணி.
மாணவர்களுக்கு வாழ்வியல் ஒழுக்கம், பொது அறிவு கற்பிப்பதில், வகுப்பு ஆசிரியர் ராஜாமணி ஆர்வம் காட்டினார். இது தொடர்பான சிறுவர்களுக்கான திரைப்படங்களை, பள்ளியில் எங்களுக்கு திரையிட்டு காண்பித்தார். அதில் 'மதியில்லா முத்தண்ணா' என்ற படம், இன்றும் நினைவில் ஓடுகிறது.
நான் உள்ளிட்ட எனது வகுப்பு மாணவர்கள் அனைவரும், 1972ல், பிளஸ் 2 இறுதித்தேர்வில், வெற்றியுடன் வெளியேற, என் ஆசிரியர்களின் அறிவுரைகளும், அரவணைப்பும் தான் காரணம். தலைமை ஆசிரியராக இருந்த ஓ.வி.கோபாலன், எங்களுக்கு கணக்குப்பாட ஆசிரியராகவும் சிறப்பாக கற்பித்தார்.
தற்போது என் வயது, 70. ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிகளின் முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி, தி.நகர், இன்போசிஸ் அரங்கில், சமீபத்தில் நடந்தது. இதில், ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலர் சுவாமி பத்மஸ்தானந்தாஜி தலைமை தாங்கி சிறப்பித்தார். பத்மபூஷன் விருது பெற்ற முன்னாள் மாணவர், ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமிக்கு பாராட்டு தெரிவித்தோம்.
நிகழ்வில் இறைவன் அருளால், 53 ஆண்டுகளுக்கு பின், எனது 7ம் வகுப்பு ஆசிரியர் ராஜாமணியை, அவரது 93வது வயதில் சந்தித்தேன். அதே தோற்றத்துடன் இருந்ததால், உடனடியாக அடையாளம் கண்டு, அவருடன் மிக மகிழ்ச்சியாக உரையாடினேன்.
வகுப்பாசிரியர் ராஜாமணி போதித்த வாழ்வியல் ஒழுக்கம் மற்றும் பொது அறிவு தான், என் வாழ்வின் பல பகுதிகளிலும் பயனுற இருந்தது. அவரை போற்றி வணங்குகிறேன்.
- கோபாலன் பத்மநாபன், சென்னை.

