
பறவை இனம் தனித்த இயல்பு உடையது. அதன் திறன்கள் உலகெங்கும் மக்களை கவர்ந்துள்ளது. பறவைகளை பயன்படுத்தி பல்வேறு பந்தயங்கள், போட்டிகள் மற்றும் சண்டைகள், உலகின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகின்றன. இது குறித்து பார்ப்போம்...
புறா பந்தயம்: ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், நெதர்லாந்து, அண்டை நாடான சீனாவில், புறா பந்தயம் பிரபலமாக உள்ளது. இதில், ரேஸிங் ஓமர் புறாக்கள், ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு வரை பறந்து, இலக்கை அடைகின்றன. கி.பி., 220 முதல் இந்த போட்டி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
சேவல் சண்டை: ஆசியா, தென் அமெரிக்க நாடுகளில் பாரம்பரிய விளையாட்டாக உள்ளது, சேவல் சண்டை. பயிற்சி பெற்ற சேவல்களின் கால்களில், கூர்மையான கத்திகள் கட்டப்பட்டு சண்டைக்கு விடப்படும். விலங்கு வதை தடுப்பு சட்டத்தால், பல நாடுகளில் இந்த போட்டி தடை செய்யப்பட்டுள்ளது.
புல்புல் பந்தயம்: வட கிழக்கு மாநிலமான அசாமில், 'மாக் பிஹு' என்ற கொண்டாடத்தின் போது, இந்த விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. சின்னான் என்ற புல்புல் பறவைகளை சண்டையிட வைக்கும் விளையாட்டு இது. பறவைகள் துன்புறுத்தப்படுவதாக, கவுகாத்தி உயர் நீதிமன்றம், இந்த பந்தயத்திற்கு தடை விதித்துள்ளது.
குருவி பந்தயம்: கிழக்காசிய நாடான ஜப்பானில், இந்த விளையாட்டு நடத்தப்படுகிறது. இதில், சிறிய குருவிகள் சிறு கூண்டுகளில் அடைக்கப்படும். அவை, உணவை வேகமாக உண்ண முயல்கின்றன. இந்த விளையாட்டு, பறவைகளின் இயல்பான வேகத்தையும், சுறுசுறுப்பையும் சோதிக்க உதவுகிறது.
மனிதர்களுக்கு பறவைகள் மீதான ஆர்வம் மற்றும் அவற்றின் தனித்துவ திறன்களைப் பயன்படுத்துவதை, இந்த போட்டிகள் வெளிப்படுத்துகின்றன. விலங்குகள் நலனை கருத்தில், கொண்டு இவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
- வி.பரணிதா

