PUBLISHED ON : நவ 08, 2025

டில்லியில் 9ம் வகுப்பு முடித்த போது திடீரென இடம் பெயர்ந்தது என் குடும்பம். அதனால், பெங்களூரு அருகே அல்சூர் செவன்த் டே அட்வென்டிஸ்ட் ஆங்கிலப் பள்ளியில், 2007ல், 10ம் வகுப்பு சேர்ந்தேன். முதல் மொழியாக தமிழ் கற்றிருந்ததால் இங்கும் அதையே விரும்பி கேட்டேன். அந்த பாடப்பிரிவு இல்லாததால், ஹிந்தியை தேர்வு செய்தேன். கன்னடம் படிக்க அவசியமில்லை என எண்ணியிருந்தேன்.
ஆனால், ஆறு மாதங்களுக்கு பின், வகுப்பில் கன்னட மொழி படிப்பது கட்டாயம் என தீர்ப்பு கூறியது, உச்ச நீதிமன்றம். செய்வதறியாது திணறினேன். பொது தேர்வில் தவறினால் ஒரு வருடம் வீணாகுமே என்ற கவலை ஏற்பட்டது.
நல்ல வேளை, பக்கத்து தெருவில் வசித்த கன்னட பேராசிரியை ஷீலாவின் அறிமுகம் கிடைத்தது. கவனம் செலுத்தினால் வெற்றி பெறலாம் என நம்பிக்கையூட்டி கற்பித்தார். விடாமுயற்சியுடன் இரவு, பகல் பாராமல் பயிற்சி செய்தேன். தவறுகளை உடனுக்குடன் திருத்தி புரிய வைத்தார். பயந்தபடி இறுதி தேர்வு எழுதி, 43 மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றேன். நன்றி தெரிவித்த போது கட்டித்தழுவி வாழ்த்தினார் பேராசிரியை.
எனக்கு, 34 வயதாகிறது. குடும்பத் தலைவியாக இருக்கிறேன். அயராத உழைப்புடன் பொறுமையாக கன்னட மொழியை கற்பித்த பேராசிரியை ஷீலாவை மானசீகமாக வணங்கி மகிழ்கிறேன்.
- ஐஸ்வர்யா, பெங்களூரு. தொடர்புக்கு: 97319 51333

