PUBLISHED ON : ஆக 22, 2026

ஆசை, பெரும் கஷ்டத்தில் தள்ளி விடும் என்பதை உணர்த்துகிறது ஓணம் பண்டிகை.
இரணியன் என்ற அசுரனின் மகன், பிரகலாதன்; இவன், திருமாலின் தீவிர பக்தன். இரணியன் தன்னை தான் வணங்க வேண்டும் என்றான். இந்த பேச்சைக் கேட்காத மகனை கொல்ல முயன்றான்.
கோபமடைந்த திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து, இரணியனைக் கொன்றார். பின், மன்னனாக பொறுப்பேற்ற பிரகலாதனுக்கு, திரிதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களது மகன் விரோசனன், தேவாம்பையை மணந்தான். இவர்களுக்கு பிறந்த மகாபலி தான், ஓணம் பண்டிகையின் கதாநாயகன்.
பேராசையால் மன்னன் மகாபலி, தேவலோகம், பூலோகம், பாதாளம் மற்றும் தேவர்களை கட்டுக்குள் கொண்டு வந்தான்.
காஷ்யப முனிவர், அதிதி தம்பதியர் பிள்ளைகள் தான் தேவர்கள். அவர்களை விடுவிக்க ஒரு பங்குனி மாதத்தில், 12 நாட்கள், திருமாலுக்கு பால் மட்டும் படைத்து விரதம் இருந்தாள் அதிதி. இதன் பலனாக அவள் வயிற்றில் பிறப்பதாக வாக்களித்தார் திருமால். அவ்வாறு பிறந்த பிள்ளை குள்ளமாக இருந்ததால், வாமனர் என பெயர் சூட்டி வளர்த்தனர். மகாபலியை சந்தித்த வாமனர், வேத பாடசாலை அமைக்க, 3 அடி இடம் கேட்டார்.
மகாபலி தருவதாக சம்மதிக்க, திடீரென உயரமாக வளர்ந்த வாமனர், 2 அடியில் உலகங்களை அளந்து, 'அடுத்து அடி வைக்க நிலம் எங்கே...' என்றார். மன்னன் மகாபலி பணிவுடன், தன் தலையைக் கொடுத்தான். அவனை பாதாளத்துக்கு அனுப்பினார், வாமனர்.
அப்போது, 'நான் மக்களைக் காண ஆண்டில் ஒருநாள் அனுமதிக்க வேண்டும்...' என்றான் மகாபலி. திருமாலும் வரத்தைக் கொடுத்தார். அதன்படி, மக்களை காண மன்னன் மகாபலி வரும் நாளே, ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. பேராசை பெரும் கஷ்டத்தில் தள்ளிவிடும் என்பதை இந்த பண்டிகை உணர்த்துகிறது.
- தி.செல்லப்பா
