
உலகம் முழுதும் பரவலாக பயிரிடப்படும் தாவரம் பேரி. இதன் தாயகம் மத்திய ஆசிய கண்டப்பகுதி. இதை, 3,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் பயன்படுத்துவதாக வரலாற்று செய்தி உள்ளது. பண்டைய கிரேக்க, ரோமானிய நாகரிகங்களில், உணவு வகைகளில் பயன்படுத்தப்பட்டது. இப்போது உலகின் பல பகுதியிலும் உணவாக உள்ளது. குறிப்பாக ஐரோப்பா, ஆசியா, அமெரிக்காவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
பேரிக்காயில் நார், வைட்டமின் - சி, கே மற்றும் பொட்டாஷியம் சத்துகள் நிறைந்துள்ளன. நடுத்தர அளவிலான, 180 கிராம் எடையுள்ள பேரிக்காயை உண்டால், 100 கலோரிகள் கிடைக்கும். இது செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கும். இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இதய மற்றும் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். பேரிக்காயில் உள்ள பொட்டாஷியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இது நீரிழிவால் பாதிக்கப்பட்டோருக்கு உகந்த உணவாக உள்ளது. ஜாம், சாலட் மற்றும் இனிப்பு வகைகள் தயாரிக்க பேரிக்காய் பயன்படுகிறது. இதன் மென்மையான இனிப்பு சுவை அனைவரும் விரும்பும் வகையில் உள்ளது. தோலுடன் சாப்பிடுவதால் அதிக நன்மைகள் கிடைக்கும்.
- நர்மதா விஜயன்

