PUBLISHED ON : செப் 27, 2025

'பாப்பா... சீக்கிரம் வீட்டுக்குள்ள வா... அம்மா வரும் நேரம் ஆச்சு...''
தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த தங்கை ஜனனியை அதட்டினான் கணேஷ்.
''அண்ணா... சற்று பொறு... அந்த பட்டாம்பூச்சிய புடுச்சு வரேன்...''
''ரொம்ப நேரமா அதன் பின்னால சுத்திட்டு இருக்க... இப்படி பண்ணினா அதை புடிக்க முடியாது...''
''எனக்கு அந்த பிங்க் கலர் பட்டாம்பூச்சி தான் வேணும்...''
''இங்கேயே நில்லு...''
ஜனனியை ஒரு பகுதியில் நிறுத்தி வைத்தான் கணேஷ்.
பின் சிவப்பு, மஞ்சள், வெண்மை என பூக்கள் நிறைந்த தோட்டத்தில் அதிர்வுகள் இன்றி மென்மையாக நடந்து சென்றான் கணேஷ்.
''அண்ணா... அதோ அது...''
துள்ளி குதித்தாள் ஜனனி.
கண்ணை உருட்டி, ''ஸ்சு...'' என உதட்டை பிதுக்கி அமைதிபடுத்தியபடி ஒரு பூச்செடி அருகில் எந்த அசைவும் இன்றி நின்றான்.
பிங்க் கலர் பட்டாம்பூச்சி மென்மையாக சிறகடித்து வெண்மை நிற ரோஜா மீது அமர்ந்தது. தேன் குடிக்க ஆரம்பித்தது.
கனிவுடன் கவனித்து கொண்டிருந்தான் கணேஷ்.
விருந்து சாப்பிடுவது போல தேனை ருசித்தது பட்டாம்பூச்சி.
பின், இறக்கைகளை லேசாக விரித்து பறக்க முயன்றது.
பட்டென அதை பிடித்தான் கணேஷ்.
''பாப்பா... இந்தா... நீ விரும்பிய பட்டாம்பூச்சி...''
கொடுத்ததும், ''ஆஹா...'' என மகிழ்ச்சியோடு வாங்கினாள் ஜனனி.
''அண்ணா... இந்த பட்டாம்பூச்சிக்கு பிஸ்கட் தரப்போறேன்...''
''அது பிஸ்கட் எல்லாம் சாப்பிடாது...''
''அப்போ ஆரஞ்சு ஜூஸ் தரப்போறேன்...''
''அதையும் குடிக்காது...''
''அப்போ பட்டாம்பூச்சிக்கு பிடிச்ச மாதிரி அம்மாவ சமைச்சு தர சொல்ல போறேன்...''
''அம்மா சமைக்குறதையும் சாப்பிடாது...''
''வேற என்ன சாப்பிடும்...''
''பட்டாம்பூச்சிக்கு புடுச்சது தேன் தான்... அதுவும் பூவுல இருக்குறது தான் வேணும்... அதனால தான் நம்ம ரோஜா தோட்டத்தை சுத்தி சுத்தி வருது. எப்படி நாம் வீட்டுல இருக்கோமோ, அதுமாதிரி தான் பட்டாம்பூச்சியும், தேன் குடிக்க ரோஜா செடிக்கு வரும். அப்புறம் அதோட வீட்டுக்கு போயிடும். வேற எதையும் சாப்பிடாது...''
''அப்போ அதை விட்டுரலாம் அண்ணா... அதோட வீட்டுக்கு போகணும்ல...''
பட்டாம்பூச்சியை விட்டு இருவரும் வீடு திரும்பினர்.
அந்த பிங்க் கலர் பட்டாம்பூச்சியும் வீட்டருகே மகிழ்வுடன் சிறகடித்தது.
பட்டூஸ்... இயற்கை அழகை ரசிப்பது சிந்தனை திறனை வளர்க்கும்.
- ர.ஹரிகரன்