தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/புராஜெக்ட் ஓ! (2)

புராஜெக்ட் ஓ! (2)

புராஜெக்ட் ஓ! (2)


PUBLISHED ON : ஆக 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: பள்ளி வகுப்பறையில் மாணவ - மாணவியருக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார், தமிழாசிரியை வசந்தா. சற்று ஆர்வக்குறைவாக இருந்தோரிடம் மொழியின் முக்கியத்துவத்தையும், அதை படிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். இனி -



தமிழ் வகுப்பு முடியும் நேரம், வாசலில் ஒரு உருவம் நிழலாடியது.

அங்கே, அறிவியல் ஆசிரியை மதிவதனி நின்றிருந்தார்.

வசந்தா டீச்சர், 50 வயதைத் தொட்டவர். மதிவதனிக்கோ, 25 வயது தான்.

சிரித்தபடி, வகுப்புக்குள் நுழைந்தார், மதிவதனி. மாணவர்கள் மத்தியில் புதிய உற்சாகம் பரவியது.

''அடுத்த மாதம், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடக்குது. அதுல, நம்ம ஸ்கூல் சார்பா ஒரு அட்டகாசமான, 'புராஜெக்ட்' கொண்டு போகணும்...'' என்றார், மதிவதனி.

வகுப்பறையில் மெல்லிய சலசலப்பு எழுந்தது.

''இந்த கண்காட்சியில் தேர்வு செய்யப்படுற, 10 புராஜெக்ட்டுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கிறாங்க. அந்த, 10ல், சிறந்த ரெண்டு புராஜெக்ட், தேசிய அளவிலான கண்காட்சிக்குப் போகும். அந்த புராஜெக்ட் ரெண்டுக்கும், தலா 10 லட்சம் ரூபாய் பரிசு உண்டு...''

படிப்பில் ஈடுபாடு உள்ள மாணவர்கள் மட்டும், இதையெல்லாம் ஆர்வத்துடன் கவனித்தனர்.

''ஆர்வமுள்ள மாணவர்கள் நல்லா யோசிச்சு, என்ன செய்யப் போறோம்ங்கிற, புது யோசனையுடன், நாளைக்கு என்னை வந்து பாருங்க. நீங்க முன்மொழியும் புராஜெக்ட் தனித்துவமானதாக இருக்கணும். ஆல் தி பெஸ்ட்...'' என்று சொல்லி விட்டு, புன்னகையுடன் விடைபெற்றார் மதிவதனி.

மதிய உணவு இடைவேளைக்கான, மணி அடித்தது.

மைதானத்தில் வேப்ப மரத்தடிக்கு கதிரும், அஞ்சலியும், நண்பர்களும் சென்றனர்.

கதிர், அஞ்சலி, வினோதா, குமார் மற்றும் பரத் என, இந்த ஐவரும் தான், பள்ளியில் எப்போதும் ஒன்றாக இருப்பர்.

தன் சாப்பாட்டு டப்பாவைத் திறக்கும் போதே, அஞ்சலியின் முகம் தீவிர சிந்தனையில் இருப்பது தெரிந்தது.

''டேய் கதிர்... மதி மேம் சொன்னது செம்ம சவால்ல... நாம ஏன், சுற்றுச் சூழலுக்கு உகந்த பிளாஸ்டிக் பத்தி ஏதாவது செய்ய கூடாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு இப்போதைக்கு ரொம்பவே அவசியம்...'' என்றாள், அஞ்சலி; ஒரு கவளம் எலுமிச்சைச் சாதத்தை வாயில் போட்டபடி.

''அதெல்லாம் ரொம்ப பழைய ஐடியா அஞ்சலி...'' என்றாள், அருகில் இருந்த வினோதா.

கீழே கிடந்த ஒரு சிறிய குச்சியை இடது கையால் எடுத்து, மண்ணில் கிறுக்கியபடி, ''கண்காட்சியில எல்லாரும், இயற்பியல், வேதியியல்ன்னு தான் யோசிப்பாங்க. நாம, உயிரியல் பக்கமா போனா என்ன...'' என்றான், கதிர்.

''சூப்பர்டா... இது புதுசா இருக்கும்...'' ஆமோதித்தாள், அஞ்சலி.

''நான் கூட, ஒரு ரோபோ தயார் பண்ணலாம்ன்னு தான் நினைச்சேன். ஆனா, இது நல்ல ஐடியாவா இருக்கு...'' என்றான், பரத். ரோபோ என்று சொன்னதும், அஞ்சலியின் கண்கள் பளிச்சிட்டன.

''எனக்கு ஒரு ஐடியா நண்பாஸ்...'' என்றாள், அஞ்சலி.

''மரக்கட்டைகளை பயன்படுத்தி, 'ஈக்கோ ப்ரெண்ட்லி' ரோபோ தானே...'' என்றான், குமார்.

''இல்ல. ரோபோ செய்யறதுக்கு பதிலாக, ஒரு உயிரை உருவாக்குனா என்ன?''

''உயிரா... அது எப்படி தாயே சாத்தியம்... உன் கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா...'' சிரித்தான், பரத்.

''உயிர்ன்னா, குறைந்தபட்சம் ஒரு செயற்கை செல் அல்லது கொஞ்சம் திசுக்களை உருவாக்கி பார்க்கலாம். முயற்சிப் பண்ணுவோம். இல்லாட்டி வேற யோசிக்கலாம்...''

''சாத்தியமா அஞ்சலி...'' என்றான், குமார்.

''இப்போ தான், நுண்ணுயிரியல், உயிரி தொழில்நுட்பம் எல்லாம் முன்னேற்றம் அடைந்து வருதே. முயற்சிப்போம்...'' என்றான், கதிர்.

''ஆனால், இது சுலபம் இல்ல. நிறைய யோசிக்கணும். விவாதிக்கணும். நிறைய படிக்கணும். 'ரெபரன்ஸ்' எடுக்கணும்...''

''இன்னிக்கு சாயங்காலம் இது பற்றி விவாதிக்கலாம்...'' என்றான், கதிர்.

மாலை, 4:30 மணி - பள்ளி வளாகமே பறவைகளின் கூச்சல் போல, மாணவரின் இரைச்சலால் நிறைந்தது.

பைகளை மாட்டி, மாணவர்கள் வாசலை நோக்கி ஓட, கதிர், அஞ்சலி, வினோதா, குமார் மற்றும் பரத் மெல்ல, பள்ளியின் பின்புறம், பெரிய அரச மரத்தடிக்கு வந்து சேர்ந்தனர். அது தான் அவர்கள், வழக்கமாக பொதுக்குழு கூட்டும் இடம்.

அரச மரத்து நிழலில், சிமென்ட் பெஞ்சில் அஞ்சலியும், வினோதாவும் அமர, கதிர், குமார் மற்றும் பரத் மூவரும், தரையில் கால்களை பரப்பி, 'ரிலாக்ஸ்' ஆக அமர்ந்தனர்.

''சரி, மகளிர் அணி, மதியம் ஏதோ பெரிய பிளான் போட்டீங்களே... அதை முதல்ல சொல்லுங்க...'' விவாதத்தைத் துவங்கி வைத்தான், குமார். பையில் இருந்து, வெள்ளைத்தாளை எடுத்தாள், அஞ்சலி.

''மதியம், நான் சொன்னது தான், குமார். அறிவியல் கண்காட்சிக்கு ஒரு புது உயிரை, அதாவது செயற்கையான செல் உருவாக்கப் போறோம்...''

''கேட்க நல்லாத் தான் இருக்கு... ஆனா, உயிருள்ள செல் உருவாக்குறது சாதாரண விஷயமா... அதுக்கு அடிப்படை என்ன, எதை வச்சு ஆரம்பிப்போம்?'' என்றான், பரத்.

முன்னோக்கி நகர்ந்து அமர்ந்த கதிர், ''அதுக்குத்தான் நானும், அஞ்சலியும் யோசிச்சோம், பரத். மூலக்கூறு உயிரியல், அப்புறம், உயிரி தொழில்நுட்பத்துல, இப்போ எல்லாம், மரபணுக்களை மாற்றி அமைப்பது எல்லாம் வந்துடுச்சு. நாம ஏன் மனித அணுக்களை அடிப்படையா வச்சு யோசிக்கக் கூடாது?'' என்றான்.

''மனித அணுக்களா... எங்க போகப் போறீங்க...'' என, கண்ணைக் குறுக்கினாள், வினோதா.

திரும்பி கதிரைப் பார்த்தாள், அஞ்சலி.

''நீயே சொல்லு...'' என்றான், கதிர்.

''இங்க பாருங்க...'' என்று, எடுத்து வந்திருந்த தாளில் சில எழுத்துக்களால் குறியீடுகளை எழுதி காட்டி பேச ஆரம்பித்தாள், அஞ்சலி.

அவள் சொல்லச் சொல்ல புன்னகைத்தான், கதிர். மற்ற மூவரும், வியப்பில் வாய் பிளந்தனர்.

இப்படி ஒரு அசாத்தியமான, அதே சமயம் மிரட்டலான, அறிவியல் சிந்தனையை கனவிலும் நினைத்து இருக்கவில்லை.

அவர்கள் மனதில் நம்பிக்கை துளிர்த்தது. அதுவரை வெறும் அறிவியல் கண்காட்சியாகத் தெரிந்த ஒன்று, இப்போது அவர்கள் அடியெடுத்து வைக்கப் போகும் பிரமாண்ட அறிவியல் பயண துவக்கமாக மாறி இருந்தது.



- தொடரும்...

ஜாரா நரேஷ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us