தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/புராஜெக்ட் ஓ (3)

புராஜெக்ட் ஓ (3)

புராஜெக்ட் ஓ (3)


PUBLISHED ON : செப் 05, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 05, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: பள்ளி வகுப்பறையில் மாணவ, மாணவியருக்கு பாடம் நடத்திய அறிவியல் ஆசிரியை மாநில அளவில் நடக்கும் கண்காட்சியில் பங்கேற்பது குறித்து அறிவித்தார். அதில் சமர்ப்பிக்க புராஜக்ட் தயாரிக்கும் ஆலோசனையில் மாணவ மாணவியர் ஈடுபட்டனர். இனி-

மூலக்கூறு உயிரியல், உயிரி தொழில் நுட்பம், மரபணு மாற்றி அமைப்பு மற்றும் மனித அணுக்கள் என்று, 'பில்ட் அப்' கொடுத்த அஞ்சலி, திரும்பிக் கதிரை பார்த்தாள்.

''நீயே செல்லு...'' என்றான், கதிர்.

எடுத்து வந்திருந்த தாளில் குறியீடுகளை எழுதி காட்டி பேச ஆரம்பித்தாள், அஞ்சலி.

''நம்ம ரத்தத்துல இருக்குற வெள்ளை அணுக்களில் தான், டி.என்.ஏ., இருக்கும். ரத்தத் துளிகளைச் சேகரித்து, டி.என்.ஏ.,-வை தனியாப் பிரிச்சு எடுக்கணும்...''

''ரத்தத்துல இருந்து, டி.என்.ஏ-.,வை பிரிச்சாச்சு... அப்புறம்...'' என்று ஆர்வமாகக் கேட்டான், குமார்.

''அங்க தான் மெயின் மேட்டரே இருக்கு...'' என்றான், உற்சாகமாக கதிர்.

''மண்புழு பற்றி படிச்சிருக்கோமே, அதை இரண்டா வெட்டுனா, 'துண்டாதல்' முறைப்படி, அது ரெண்டு தனிப் புழுவா வளரும்...''

''ஆமா...''

''அதே மாதிரி, பல்லி வாலை துண்டித்தால், 'மீளுருவாக்கம்' முறைப்படி, அது மறுபடி வளரும் இல்லையா...''

விஷயங்களை உள்வாங்கத் துவங்கினான், பரத்.

''ஓ... அப்போ மண்புழுவோட அந்தத் துண்டாதல் மரபணுவையும், பல்லியோட மீளுருவாக்க மரபணுவையும் எடுத்து... நம்ம ரத்த வெள்ளை அணுக்களோட ஆய்வகத்தில் இணைக்கப் போறீங்களா...''

''சரியாச் சொன்ன பரத்...'' என, அவன் தோளில் தட்டினாள், அஞ்சலி.

''மனித ரத்த அணுக்களையும், அந்த விலங்குகளோட மரபணுக்களையும் ஒண்ணா இணைச்சு... அங்கே ஒரு புதிய, 'செயற்கை ஒருசெல் உயிரியை' நாம உருவாக்குறோம்... அதுக்கு இழந்த பாகங்களை மீட்குற சக்தியும் இருக்கும்; அதே சமயம், அது ஒரு புது வகையான உயிரா இருக்கும்...'' என, அஞ்சலி விவரிக்க, வியப்போடு பார்த்தாள், வினோதா.

''நினைச்சுப் பார்க்கவே மிரட்டலா இருக்கு. ஆனா, இந்த மண்புழு, பல்லியோட மரபணுக்களை எல்லாம் எப்படித் தனியா பிரிக்க முடியும்... அதுக்கு ரொம்பப் பெரிய ஆய்வக வசதி வேணுமே...'' என்றான், பரத்.

''நம்ம ஸ்கூல் ஆய்வகத்துலயே அதுக்கான அடிப்படைக் கருவிகள் இருக்கும், வினோதா. அதை விட முக்கியமா, நம்ம மதிவதனி மேம் இருக்காங்க. அவங்க, உயிர் தொழில் நுட்ப ஆராய்ச்சி பண்ணுறவங்கன்னு கேள்விப்பட்டேன். ஐடியாவை நாம ஒழுங்கா, 'பிரசென்ட்' பண்ணா, மேம் கண்டிப்பா உதவி பண்ணுவாங்க...'' என்றான், நம்பிக்கையுடன் கதிர்.

''ஒருவேளை இந்த சோதனை ஜெயிச்சு, அந்த, ஒரு செல் உயிரி உருவாகிடுச்சுன்னா... அதோட உருவம் எப்படி மாறும்... அது, வெறும் செல்லாவே இருக்குமா... இல்ல, பெருசாகுமா...'' என்றாள், வினோதா.

''அதைத்தான் நாம மதிவதனி மேம் கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கணும். இந்த புராஜெ க்ட் ஓ.கே.,வா?'' என்றாள், அஞ்சலி .

''சூப்பர்... இது மட்டும் சக்சஸ் ஆயிடுச்சுனா, தேசிய அளவுலயே நம்ம ஸ்கூலுக்குத் தான் முதல் பரிசு...'' என, கண்களில் லட்சிய வெறியோடு கூறினாள், வினோதா.

''சரி, அப்போ திட்டம் போட்டாச்சு. முதல் வேலையா, மதி மேமைப் பார்க்கிறோம். இந்த உயிரி ஐடியாவை உடைக்கிறோம்...'' என்றான், பரத்.

ஐந்து நண்பர்களும் கைகளை ஒன்றாகக் கோர்த்து, 'டீல்...' என்றனர். அரச மரத்து இலைகள், காற்றில் அசைந்து வாழ்த்துச் சொல்வது போல இருந்தது.

ம றுநாள் காலை, பள்ளி வளாகம் பரபரப்பாக இருந்தது. ஆனால், இந்த ஐந்து நண்பர்களின் கால்களோ நேராக, அறிவியல் ஆசிரியை அறையை நோக்கித்தான் நடந்தன. உள்ளே, தடிமனான புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார், மதிவதனி.

மெதுவாகக் கதவைத் தட்டி, ''மேம்... உள்ளே வரலாமா...'' என்றான், கதிர்.

''வாங்கப்பா... என்ன ஐவரணி மொத்தமா வர்றீங்க... அறிவியல் கண்காட்சிக்கான யோசனை ஏதாவது கிடைச்சதா...'' என்று புன்னகையுடன் கேட்டார், மதிவதனி.

தான் கொண்டு வந்திருந்த வெள்ளைத்தாளை, மதிவதனி டீச்சரின் மேஜை மீது வைத்தாள், அஞ்சலி. ஐந்து பேரும் மேஜையைச் சுற்றி நின்று கொள்ள, கதிரும், அஞ்சலியும், 'செயற்கை ஒரு செல் உயிரியை' உருவாக்க விரும்பும் திட்டத்தை விவரிக்க துவங்கினர்.

அவர்கள் சொல்லச் சொல்ல, மதிவதனியின் கையில் இருந்த புத்தகம் மேஜைக்குப் போனது. புன்னகை மறைந்து, முகம் தீவிர சிந்தனைக்கு மாறியது. செயற்கை செல் உருவாக்கம் பற்றி அஞ்சலி பேசிய போது, மதிவதனியின் கண்கள் விசித்திரமாக மின்னின.

சொல்லி முடித்ததும், சில நொடிகள் நிசப்தம் நிலவியது. ஐந்து பேரின் இதயங்களும் எதிர்ப்பார்ப்பில் படபடவென அடித்துக் கொண்டிருந்தன.

மதிவதனி மேம், லுாசுத்தனம் என்று சிரிக்கப் போகிறாரோ என்ற பயம், வினோதா முகத்தில் தெரிந்தது.

ச ட்டென, நாற்காலியில் இருந்து எழுந்தார், மதிவதனி. முகத்தில் பிரமாண்டமான ஆச்சரியமும், பெருமையும் கலந்திருந்தது.

''அமேசிங்... அவுட் ஸ்டாண்டிங்...'' என்று உரக்கச் சொல்லி, கைத்தட்டி பாராட்டினார், மதிவதனி.

''மேம்... அப்போ நாங்க சொன்னது லுாசுத்தனமா இல்லையா...'' என்று, தயக்கத்துடன் கேட்டான், குமார்.

''ஹேய்... உங்களோட இந்த, 'கிரியேட்டிவிட்டி'யும், அறிவியலை அணுகுற ஈடுபாடும் எனக்கு எவ்வளவு ஆச்சரியத்தைத் தருது தெரியுமா...'' என்றார், மதிவதனி உற்சாகமாக.

''பத்தாம் வகுப்பு படிக்கிற நீங்க, அறிவியல் கண்காட்சிக்காக, வழக்கமான மாடல்களை யோசிக்காம, உயிரி தொழில் நுட்பத்தின் உச்சக்கட்ட எல்லையான, 'செயற்கை உயிரி உருவாக்கம்' பத்தி யோசிச்சு இருக்கீங்களே... அதுக்கே உங்களை எவ்வளவு வேணும்னாலும் பாராட்டலாம். உங்களோட இந்தத் தேடலும், ஆர்வமும் தான், உண்மையான விஞ் ஞானிக்கு அழகு...''

எல்லாரது முகமும் பூரிப்பில் மலர்ந்தது. அஞ்சலியும், கதிரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.

நெற்றியைச் சுருக்கிச் சற்று யோசித்த மதிவதனி, ''ஆனா...'' என்று, குரலை லேசாகத் தாழ்த்தினார்.

ஐவரும் குழப்பத்துடன், அவர் முகத்தைப் பார்த்தனர்.



- தொடரும்...

- ஜாரா நரேஷ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us