PUBLISHED ON : செப் 19, 2026

முன்கதை: பள்ளி அறிவியல் கண்காட்சியில் சமர்ப்பிக்கும் திட்டம் ஒன்றை உருவாக்கியது, ஐந்து பேர் கொண்ட மாணவ - மாணவியர் குழு. அதற்காக ஆய்வு நடத்துவது குறித்து கலகலப்பாக பேசியபடி, மதிய உணவு சாப்பிட சென்றனர். இனி-
வி னோதா, உணவு டப்பாவில் இரண்டு அவித்த முட்டைகள், மசாலா தடவி அழகாக வைக்கப்பட்டிருந்தன.
''ஐயோ, முட்டையா... எனக்கு வேண்டாம்ப்பா. காலையில ஆய்வகத்தில், டீச்சர் கொடுத்த 'பில்டப்'ல, எனக்கு இந்த முட்டையைப் பார்த்தாலே உள்ளே இருந்து, ஒரு செல் உயிரி வெளிய வந்து, என்னை கடிச்சிடும் போல பயமா இருக்கு...'' என்றான், போலியான அச்சத்துடன், குமார்.
''ஆமாடா குமாரு... நீ சாப்பிடுற சமயத்தில, அந்த முட்டைக்குள்ள இருந்து மண்புழுவோ, பல்லியோ கூட வெளிய வரலாம். யாருக்குத் தெரியும்...'' என்று, கதிர், அவனைக் கலாய்க்க, விவாதத்தில் அஞ்சலியும் சேர்ந்து கொண்டாள்.
''ஏய் வினோதா... முட்டையோட மஞ்சள் கருவை எடேன். 'கரு வட்டு' இருக்கான்னு பார்க்கலாம்...'' என்று கேட்டாள், அஞ்சலி.
''அடிப்பாவிங்களா... நிம்மதியா ஒரு முட்டையை சாப்பிட விட மாட்டீங்களாடா...'' என்று, வினோதா புலம்பியபடி, முழு முட்டையை எடுத்து, அவளிடம் கொடுத்தாள்.
அந்த முட்டையைப் பிய்த்து, மஞ்சள் கருவை எடுக்க முயன்றாள், அஞ்சலி.
''அவிச்ச முட்டையில எல்லாம், கரு வட்டு தெரியாது. அது வெந்து, மஞ்சள் கருவோட கலந்திருக்கும். பச்சை முட்டையை உடைச்சு, ஒரு தட்டில் ஊற்றிப் பார்த்தா, மஞ்சள் கருவின் மேல மிதக்குற சிறிய வெள்ளை நிற கருவட்டுப் புள்ளித் துல்லியமா தெரியும்...'' என்று சீரியசாக விளக்கினான், குமார்.
விளையாட்டுப் பேச்சுகளோடு ஜாலியாக மதியம் கழிந்தாலும், அவர்கள் மனதிற்குள் இனம் புரியாத பதற்றமும், எதிர்பார்ப்பும் ஓடியபடி இருந்தது.
வ குப்பு முடிந்ததும் நண்பர்கள் ஐவரும், 12ம் வகுப்பு ஆய்வகத்துக்கு வந்தனர்.
'மைக்ராஸ்கோப், டெஸ்ட் ட்யூப், மைக்ரோ நீடில்' என்று, உபகரணங்களோடு தயாராக இருந்தார், மதிவதனி.
''நம்ம புராஜெக்ட்டுக்கு தேவையான ஒரு பகுதி உபகரணங்களை, நான் தயார் செய்து வச்சுட்டேன். இனிமேல், நமக்கு தேவை மனித ரத்தம், மண்புழு, பல்லி, அப்புறம் ஒரு முட்டை...'' என்றார், மதிவதனி.
கதிரும், அஞ்சலியும் தங்கள் கைகளை நீட்டி, 'நாங்க ரத்தம் தருகிறோம் மேம்...' என்றனர் கோரசாக.
''நீங்க, 'மைனர்' பசங்க, சட்ட ரீதியா எந்த பிரச்னையும் வரக் கூடாது. அதனால, இந்த சோதனையில என்னோட ரத்தம் இருக்கட்டும்...'' தீர்க்கமாகச் சொன்னார், மதிவதனி.
''இன்னும் நமக்குத் தேவை மண்புழு, பல்லி, அப்புறம் முட்டை...''
''மேம்... மண்புழு பிடிக்கிற வேலை, எனக்கு அல்ப மேட்டர். எங்க வீட்டு மாடித் தோட்டத்துல பெருசு பெருசா கிடைக்கும். நாளைக்குக் காலைல அள்ளிட்டு வர்றேன்...'' என்றாள், வினோதா.
''சரி, அப்போ பல்லி...'' மதிவதனி கேட்டார்.
உடனே, பரத்தின் தோளை தட்டி, ''இன்று இரவு உங்க வீட்டுச் சுவரில் வேட்டையை ஆரம்பிச்சிட வேண்டியது தானே...'' என்றான் கதிர்.
''டேய் கதிர். என்னை கோர்த்து விடாதடா... அதைப் பார்க்கும் போதே, எனக்கு ஒரு மாதிரியா இருக்கிறது...''
''நீ , சயின்டிஸ்ட் ஆகப் போற... இந்தச் சின்னப் பல்லிக்கு போய் பயப்படலாமா...'' உசுப்பேத்தினாள், அஞ்சலி.
''சரி... எங்க வீட்டு ஹால்ல இருக்குற பல்லியை, பேப்பர் கப் வச்சு, 'லாக்' செய்து எடுத்து வர்றேன்...'' என்று முன்வந்தான், குமார்.
அவனைப் பாராட்டியபடி, 'இன்னும் முட்டை பாக்கி இருக்கே...' என்றனர்.
உடனே கையை உயர்த்தி, ''மேம், எங்க வீட்டுல கேட்டு வாங்கி வந்துடுறேன்...'' என்றான், கதிர்.
''நாட்டுக்கோழி முட்டை தான் வேணும். பிராய்லர் கோழி முட்டை சரி வராது. அதுல, கரு வட்டு சரியா இருக்காது...'' என்றார், மதிவதனி.
''சரி... பத்திரமா பஞ்சுல சுத்தி, எடுத்து வந்துடுறேன், மேம்...'' என்றான் கதிர்.
''எதுக்கும் ரெண்டா கொண்டு வந்துடு. ஒண்ணு உடைந்தாலும், மற்றதை பயன்படுத்திக்கலாம்...''
''சரி மேம்...'' என்றான், உற்சாகமாக கதிர்.
''நம்ம புராஜெக்ட்டுக்கு ஒரு பெயர் வைக்கணுமே...''
யோசனையை முன் வைத்தார், மதிவதனி.
''முட்டை புராஜெக்ட்ன்னு பேர் வைக்கலாம்...'' என, குமார் சொல்ல, எல்லாரும் சிரித்தனர்.
''ஏன் சிரிக்கிறீங்க, முட்டையில தானே உயிரியை வளர்க்க போறோம்...'' என்றான், குமார் பரிதாபமாக.
''புராஜெக்ட் ஓ அப்படின்னு வைக்கலாம், மேம். 'ஓ' அப்படிங்கறது, குமார் சொன்ன மாதிரி, வடிவத்தில் முட்டையை குறிக்கும். உயிரியின் ஆங்கிலப் பெயரான, 'ஆர்கானிசத்தின்' முதல் எழுத்தாவும் இருக்கும்...'' என்றாள், அஞ்சலி.
''சூப்பர்...'' என்று பாராட்டினார் மதிவதனி.
ம றுநாள் காலை 8:00 மணி. பள்ளி வளாகமே நிசப்தமாக இருந்தது. ஆய்வகத்துக்குள் ஐந்து நண்பர்களும், மதிவதனி டீச்சருடன் தயாராக நின்றிருந்தனர்.
அனைவரது முகத்திலும் ஒருவித பரபரப்பு. பிளாஸ்டிக் டப்பாவில் மண்புழு, பேப்பர் கப்பில் பல்லி, அட்டை டப்பாவில் பஞ்சுக்கு நடுவில் நாட்டுக்கோழி முட்டைகள் என, மேசையில் வைக்கப்பட்டு இருந்தன.
''ஆரம்பிக்கலாமா...'' என்று கேட்டபடி மதிவதனி, ஒரு ஊசியை எடுக்க,''ஒரு நிமிடம் மேம்...'' என்று அவசரமாகத் தடுத்தாள், அஞ்சலி.
எல்லாரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். என்ன ஆச்சு அஞ்சலிக்கு?
- தொடரும்...
ஜாரா நரேஷ்
