தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/புராஜெக்ட் ஓ (7)

புராஜெக்ட் ஓ (7)

புராஜெக்ட் ஓ (7)


PUBLISHED ON : அக் 03, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: பள்ளி மாணவ, மாணவியருக்கான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க, ஐந்து மாணவ, மாணவியர் கூட்டாக உருவாக்கிய திட்ட அடிப்படையில் உரிய பொருட்களை சேர்த்து ஆய்வகத்தில் செயல்படுத்த வழிகாட்டினார், ஆசிரியை மதிவதனி. உயிரி உருவாக்கத்துக்கு இன்குபேட்டரில் பொருட்களை வைத்து சென்றனர். இனி-

திங்கட்கிழமை காலை, 8:00 மணிக்கு முன்பே, கதிர், அஞ்சலி, வினோதா, குமார், பரத் என, ஐந்து பேரும் ஆய்வக வாசலில் நின்றிருந்தனர்.

''எதாவது உயிரி உருவாகி இருக்குமா...'' என்று, ஆர்வம் தாளாமல் கேட்டான், பரத்.

''இப்போ தான் உருவாகிட்டு இருக்கும்டா...'' என்றாள், அஞ்சலி.

''ஆனா, அது எப்படி இருக்கும். கோழிக்குஞ்சு மாதிரியா, இல்ல, பல்லி மாதிரியா...'' எனக் கேட்டான், குமார்.

''எல்லாம் ஒண்ணாச் சேர்ந்து அலகு, இறக்கையோட காலும், வாலும் முளைச்ச, புழு மாதிரி வந்திடப் போகுது...'' சிரிப்பை அடக்கியபடி சொன்னாள், வினோதா.

''நினைக்கவே, 'ஹாலிவுட்' பட மான்ஸ்டர் மாதிரி இருக்கு. காலைலயே பயமுறுத்தாதே, வினோ...'' என்று, போலியாக பின்னோக்கி நகர்ந்தான், குமார்.

அப்போது, காரிடாரின் மறுபுறம், மதிவதனி நடந்து வருவது தெரிந்தது; கையில் சாவிக் கொத்து இருந்தது.

'குட்மார்னிங் மேம்...' என்றனர், கோரசாக.

''குட் மார்னிங். நீங்க எல்லாம் வந்து நேரம் ஆச்சோ...''

''கொஞ்ச நேரம் தான் ஆச்சு, மேம். வீட்டுல இருப்பே கொள்ளல...'' என்றாள், வினோதா.

சாவியைப் பூட்டில் மாட்டித் திருப்பினார், மதிவதனி.

'கிளக்...'

க தவு திறந்தது. ஆய்வகத்திற்குள் நுழைந்தனர். அனைவரது இதயமும், 'திக் திக்' என்று அடித்துக் கொண்டது.

ஆய்வக மூலைக்குச் சென்று, 'இன்குபேட்டரின்' வெளிப்புற உலோக கதவை திறந்தார், மதிவதனி.

சுற்றி நின்று, ஒருவரை ஒருவர் இடித்தபடி எட்டிப் பார்த்தனர்.

இன்குபேட்டரின் உள்ளிருக்கும் கண்ணாடிக் கதவு வழியே, வெளிச்சத்தில், தட்டு தெளிவாகத் தெரிந்தது.

அதைப் பார்த்ததும் பேரதிர்ச்சிக்கு உள்ளாயினர்; அந்த தட்டில் வைத்திருந்த முட்டை இல்லை.

அனைவருமே பதட்டமாயினர்.

'முட்டை எங்கே போச்சு...'

யாருக்குமே பேச்சு வரவில்லை. ஆறு பேர் இருந்தும், ஆய்வகத்தினுள் நிலவிய அமைதி, சூழ்நிலையை இன்னும் திகிலாக்கியது.

''மேம்...'' என்று, மெதுவாக அழைத்தாள், அஞ்சலி.

எதுவும் பேசவில்லை, மதிவதனி. அவரது பார்வை, காலியான தட்டின் மீதே பதிந்திருந்தது. முகத்தில் பதட்டம் தெரிந்தது.

''மேம்... முட்டை எங்கே...'' அஞ்சலியின் குரல் பயத்தில் நடுங்கியது.

''ஒருவேளை... கீழே விழுந்திருக்குமோ...'' என்று, பரத் தயக்கத்துடன் சொல்ல, உடனே இன்குபேட்டரின் உட்புறத்திலும், அடிப்பகுதியிலும் தேடிப் பார்த்தான், கதிர்.

''இல்லடா... எதுவுமே இல்லை...'' மிடறு விழுங்கினான், குமார்.

சட்டென சுதாரித்தபடி, ''பதட்டப் படாதீங்க. நிதானமா யோசிக்கலாம்...'' என்றார், மதிவதனி.

அஞ்சலிக்கு நாக்கு வறண்டது. தன் பையில் வைத்திருந்த பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தாள்.

''எனக்கும் குடு... வாயெல்லாம் வறண்டு போகுது...'' என, வினோதாவும் குடித்தாள்.

''முதல்ல ஆய்வகத்துல தேடிப் பார்ப்போம். அப்புறம் அடுத்தகட்டமா என்ன செய்யலாம்ன்னு யோசிக்கலாம்...'' என்று மதிவதனி சொல்ல, ஆறு பேரும் பதற்றத்துடன் தேட ஆரம்பித்தனர்.

மேஜைகளின் கீழ், அலமாரிகளின் பின்புறம் என, எல்லா இடங்களிலும் தேடினர்.

ஆனால், எங்கும் எதுவும் இல்லை.

ஆய்வகமே சுத்தமாக துடைத்து வைத்தது போல இருந்தது.

''ஒருவேளை அந்த செல் உருவாகி, முட்டையை உடைத்து வெளியில் வந்திருக்குமோ...'' என்று, சந்தேகத்தைக் கிளப்பினான், பரத்.

''அப்படின்னா முட்டை ஓடு எங்கே?''

பதில் கேள்வி கேட்டான், கதிர்.

''ஒரு வேளை நத்தை அல்லது ஆமை போல முதுகில் ஓட்டையும் சுமந்து கொண்டு போயிருக்குமோ...'' என்றாள், வினோதா.

''உன் கற்பனையை நிறுத்துமா... மூடியிருந்த இன்குபேட்டரின் கண்ணாடி கதவையும், உலோக கதவையும் திறந்து, அது எப்படி வெளியில் வந்திருக்கும்...'' என்றான், குமார் டென்ஷனாக.

''சாரிடா... பதற்றத்துல எதுவுமே சிந்திக்க முடியல... முழு முட்டையும் காணோமேங்கிறதால அப்படி தோணுச்சு...''

''இங்கே எதுவுமே இல்ல. அப்படின்னா, நம்ம புராஜெக்ட்டை பற்றி தெரிந்த யாரோ அந்த முட்டையைச் சுட்டுட்டுப் போய் இருப்பாங்களோ...'' என்றான், பரத்.

இதைக் கேட்டதும் மதிவதனிக்கு, 'பகீர்' என்றிருந்தது. சட்ட புத்தகங்கள், கருப்பு கோட் அணிந்த வக்கீல்கள், கண்ணைக் கட்டிக் கொண்டிருக்கும் நீதி தேவதை சிலை, நீதிபதியின் சுத்தியெல்லாம், அவர் கண் முன் வந்து போயின.

சில நொடிகள் யோசித்தபடி நின்றார், மதிவதனி.

''நீங்க யாராவது உங்க பள்ளி நண்பர்களிடமோ அல்லது வெளியிலயோ நம்ம புராஜெக்ட் பற்றி சொன்னீங்களா?''

'இல்லை மேம்...' என்று ஐவரும் மறுத்தனர்.

''நல்லா யோசிச்சுப் பாருங்க... வேறு ஏதாவது ஒரு வழியில இந்த செய்தி கசிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கா...'' என்று கேட்டார், மதிவதனி.

யோசித்தனர்.

''மேம்...'' என்றாள், தயக்கமாக அஞ்சலி. அவள் முகமும், குரலும் மதிவதனிக்கு பதட்டத்தை தந்தது.



- தொடரும்...

- ஜாரா நரேஷ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us