PUBLISHED ON : அக் 31, 2026

முன்கதை: அறிவியல் கண்காட்சிக்காக, புதிய உயிரியை உருவாக்க மாணவ, மாணவியர் குழு சோதனை திட்டத்தை வகுத்தது. திட்டப்படி ஆய்வக இன்குபேட்டரில் வார இறுதியில் வைத்து சென்ற முட்டை திங்களன்று மாயமாய் மறைந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆய்வக உதவியாளரிடம் விசாரித்து முட்டை ஓடு குப்பை தொட்டியில் வீசப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இனி -
குப்பைத் தொட்டியை நெருங்கும் முன், தன் கணுக்காலில் ஒரு உறுத்தலை உணர்ந்தான், குமார்.
கணுக்காலைச் சொறிந்தபடி, ''ச்சே... என்னடா இது...'' என விரலை எடுத்து பார்த்தான். அதில் சிறிய சிவப்பு புள்ளி தெரிந்தது.
''என்னாச்சு...'' என்று கேட்டான், பரத்.
''ஏதோ பூச்சி கடிச்ச மாதிரி இருக்கு...''
காலை லேசாக தேய்த்து விட்டு, குப்பைத் தொட்டியை நோக்கி நகர்ந்தான், குமார்.
ஆனால், யாரும் கவனிக்காத ஒரு விஷயம் அங்கே இருந்தது.
குமார் நின்றிருந்த, மேசைக்கு கீழே மறைவான பகுதியில், கோலிகுண்டு அளவு ஒரு ஈரமான சாம்பல் நிற உயிரி, மெதுவாக அசைந்தது.
அதற்கு உருவம் இல்லை; கண்கள் இல்லை. ஆனால் பசியோடு ரத்தத்தின் ருசியை தேடிக் கொண்டிருந்தது.
ஆய்வகத்தின் மூலையில் இருந்த குப்பை தொட்டியில் அந்த முட்டையின் ஓடுகள் கிடந்தன. மேலும், தரையை துடைத்து முருகேசன் போட்டிருந்த கசங்கிய, 'டிஷ்யூ பேப்பர்'களும் கிடந்தன.
முட்டை ஓட்டின் உட்புறம், பிசுபிசுப்பான ஈரப்பதத்துடன் இருந்தது.
''முட்டை உடைஞ்சிடுச்சுனு தெரியுது. ஆனா, எப்படி...'' கேட்டான், பரத்.
''ஒருவேளை வெப்ப அழுத்தத்தால உடைஞ்சு இருக்கும்...'' என்றார், மதிவதனி. ஆனால் அந்த விளக்கம், முழுமையாக நம்பிக்கை தரவில்லை. கெட்டுப் போனது போன்ற தடயம் அந்த முட்டையில் இல்லை. அதனால் திட்டமிட்டபடி, செயற்கை உயிரி உருவாகி இருக்குமோ என்று, மதிவதனிக்குள் சந்தேகக் கீற்று எழுந்தது.
முட்டை ஓட்டை பார்த்துக் கொண்டிருந்த அஞ்சலி, ''மேம்... உண்மையாவே இதுக்குள்ள இருந்து ஏதாவது வெளிய வந்திருக்குமா...'' என்றாள்.
''அதுக்கு வாய்ப்பு குறைவு அஞ்சலி...''
மதிவதனி குரலில் இருந்த தயக்கத்தை, மற்றவர்களால் தெளிவாகப் புரிய முடிந்தது.
''வாய்ப்பு குறைவு அப்படின்னா, ஏதாவது உருவாகி இருக்கலாம்ன்ற சாத்தியத்தையும், முழுசா மறுக்க முடியாது தானே, மேம்...'' என்றாள், வினோதா.
சில நொடிகள் அமைதியாக இருந்த மதிவதனி, ''செயற்கையா செல் உருவாகுறதே பெரிய விஷயம். அதுல இருந்து முழு உயிரினம் உருவாகுறது, அவ்வளவு சாதாரண விஷயமா தோணல. நாம தான் கொஞ்சம் ஓவரா யோசிச்சுக்கிட்டு இருக்கோம்ன்னு நினைக்கிறேன்...''
சாதாரணமாகப் பேச முயன்றாலும், வார்த்தைகள் சற்றே தடுமாறின.
அந்த நேரம், பள்ளி துவங்க, முதல் மணி ஒலித்தது.
''இன்னிக்கு வகுப்பை கட் அடிச்சி, நம்ம 'புராஜெக்ட் ஓ' என்னங்கிறதைப் பார்க்கலாமா...'' ஆர்வமுடன் கேட்டாள், வினோதா.
''வேண்டாம். நீங்கல்லாம் வகுப்புக்குப் போங்க... இந்த விஷயத்தை இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேண்டாம்..'' என்று, எச்சரிக்கை விடுத்தார், மதிவதனி. ஐந்து பேரும் வெளியேறினர்.
குப்பைத் தொட்டியில் கிடந்த முட்டை ஓட்டை பார்த்தபடி நின்றிருந்தார் மதிவதனி. பயம், பதட்டம், குழப்பம் எல்லாம் கலவையாக, அவர் மனதை ஆக்கிரமித்தன.
அடுத்து கையுறை அணிந்து, குப்பைத் தொட்டியில் கிடந்த, முட்டை ஓடுகளை ஒரு கவரிலும், தரையில் சிந்தியிருந்த திரவத்தை துடைத்து, முருகேசன் போட்டிருந்த, 'டிஷ்யூ பேப்பர்'களை இன்னொரு கவரிலும் எடுத்து பத்திரப்படுத்தினார் மதிவதனி.
திட்டத்தை ரகசியமாகச் செய்ய முடிவெடுத்து இருக்கக் கூடாதோ என்ற எண்ணமும், முதல் முறையாக அவருக்கு வந்தது.
அதே நேரத்தில், வெளியே காலடி சத்தம் கேட்டது. முருகேசன் உள்ளே வந்தார். அவர் முகத்தில் பொய் சொன்னதற்கான நெருடல் ஏதாவது தெரிகிறதா என கவனித்தார் மதிவதனி. எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அடுத்த வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.
கதிர், அஞ்சலி மற்றும் மூவரும் வகுப்பறைக்கு வந்து விட்டாலும், 'புராஜெக்ட் ஓ' பற்றிய விஷயங்களே மனதில் ஓடியபடி இருந்தன.
கதிருக்கு ஆசிரியர் நடத்திய எந்த பாடமும் காதில் விழவில்லை. நோட்டுப் புத்தகத்தின் ஓரத்தில், முட்டை முட்டையாக வரைந்து கொண்டிருந்தான். அதன் அருகே பல்லி வால், மண்புழு உடல், கோழிக்குஞ்சு அலகு போன்ற உருவங்களை வரைந்தான். பக்கத்தில் ஒரு கேள்விக்குறி போட்டான்.
மதிய உணவு இடைவேளைக்கான மணி ஒலித்தது. மாணவர் குரூப் வழக்கம் போல் வேப்ப மரத்தடியில் கூடினர். ஆனால், இன்று யாருக்கும் சாப்பாட்டில் கவனம் இல்லை.
''என்னால அந்த முட்டையை மறக்கவே முடியல...'' என்றாள், வினோதா.
''இன்னிக்கும் அவிச்ச முட்டை தான் கொண்டு வந்திருக்கிறியா...'' என்று கேட்டான், குமார்.
''போடா... நானே, 'டென்ஷன்'ல இருக்கேன்...''
''இன்னும் அந்த முட்டையை மறக்கவே முடியலன்னு சொன்னியே...'' என்ற குமாரை முறைத்தாள், வினோதா.
முன்புறம் அமர்ந்திருந்த அஞ்சலி, மெதுவாகத் திரும்பினாள்.
- தொடரும்...
- ஜாரா நரேஷ்
