தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/புராஜெக்ட் 'ஓ' (14)

புராஜெக்ட் 'ஓ' (14)

புராஜெக்ட் 'ஓ' (14)


PUBLISHED ON : நவ 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 21, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: அறிவியல் கண்காட்சிக்காக, புதிய உயிரியை உருவாக்க மாணவ - மாணவியர் குழு சோதனை திட்டத்தை வகுத்தது. திட்டப்படி ஆய்வக, 'இன்குபேட்டரில்' வார இறுதியில் வைத்து சென்ற முட்டை திங்களன்று மாயமாய் மறைந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆய்வக உதவியாளரிடம் விசாரித்து, முட்டை ஓடு குப்பை தொட்டியில் வீசப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதை சேகரித்து ஆய்வகத்தை தீவிரமாக கண்காணித்த மதிவதனி, உயிரி உருவானதற்கான சாத்தியத்தை ஊகித்தறிந்தார். இனி -

''அப்போ அந்த உயிரி எங்கே மேம்?'' என்று கேட்டாள் வினோதா.

''ஒற்றை செல்லாக அது உருவாகி இருந்தால், கண்ணுக்குத் தெரியாது. அது உயிரோட இருக்கலாம் அல்லது வெளிப்புற தட்பவெப்ப நிலை ஒத்துக்காம உயிரிழந்திருக்கலாம்...

''திசு தொகுப்பாகவோ, ஒரு சின்ன உயிரினமாகவோ உருவாகி இருந்தால், அது கண்ணுக்குத் தெரிய வாய்ப்பு இருக்கு...''

மதிவதனி கூறியதை கேட்டதும் அஞ்சலி மற்றும் கதிர் முகத்தில் ஒரு மலர்ச்சி மின்னியது.

வியப்படைந்தாள், வினோதா. குமாருக்கு அச்சம் ஏற்பட்டது. பரத்துக்கு பதற்றம் வந்தது.

''அது... இதுன்னு சொல்றதுக்கு பதிலா, ஒரு பேர் வச்சிடலாம் மேம்...'' என்றான், கதிர்.

''நீ சொல்றது சரி தான் கதிர்...'' என்றார், மதிவதனி.

''நம்ம, 'புராஜெக்ட் ஓ' மூலமாக உருவாக்கின அதுக்கு உயிர் இருக்கிறதால, 'உயிரி'ன்னு பேர் வச்சிடலாமா...'' என்றாள், அஞ்சலி.

''சூப்பர்...'' என்று கைதட்டினாள், வினோதா. எல்லாருக்கும் அந்த பெயர் ஒப்புதலாக இருந்தது.

''இந்த ஆய்வகம் முழுக்க, இன்னொரு தடவை நல்லா தேடிப் பார்க்கலாமா மேம்...'' கதிர் கேட்க, ஒப்புதலாகத் தலையசைத்தார், மதிவதனி.

ஆய்வகத்தில் எல்லா விளக்குகளையும் ஒளிர வைத்தனர். இரண்டு, 'டார்ச் லைட்'களை அவர்களிடம் கொடுத்தார், மதிவதனி.

''ரெண்டு ரெண்டு பேரா போகலாம்...''

மதிவதனி மற்றும் வினோதா ஒரு குழுவாக, 'இன்குபேட்டர்' பக்கம் சென்றனர். மதிவதனியின் மொபைல் போன் விளக்கை பயன்படுத்திக் கொண்டனர்.

அஞ்சலியும், கதிரும் மேஜைகளின் கீழ் தேட துவங்கினர்.

''நாங்க அப்படியே சுவர் பக்கமா தேடுறோம்...'' என்று, குமாரும், பரத்தும் நகர்ந்தனர்.

அந்த நேரம் -

''மேம்...'' என, திடீரென்று அஞ்சலியின் குரல், அலறல் போலக் கேட்டது.

ஆய்வகத்தின் கடைசி வரிசை, மேசை அருகே நின்றிருந்தவள் பக்கம் அனைவரும் திரும்பினர்.

''இங்கே... இங்கே...'' என, அஞ்சலி பதற்றத்துடன், கையை நீட்டிக் காட்டினாள். கதிரும் அதே இடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

''என்னாச்சு...'' என்று கேட்டபடி, முதலில் மதிவதனியும், தொடர்ந்து வினோதாவும் அங்கே வந்தனர். குமாரும், பரத்தும் தயக்கத்துடன் தள்ளியே நின்றனர்.

ஒரு மேஜை அருகில் இருந்து, பின்புற அலமாரி வரை, மெல்லிய ஈரக்கோடு ஒன்று, தரையில் பளிச்சென்று தெரிந்தது. யாரோ ஈரமான விரலை இழுத்து சென்றது போல. அதை உற்றுப் பார்த்தார், மதிவதனி.

அந்த ஈரம் லேசான பிசுபிசுப்புடனும், சற்றே ஒட்டும் தன்மையுடனும் இருந்தது.

மதிவதனியின் இதயம் வேகமாகத் துடித்தது.

''இதுதான் காலைல, முருகேசன் அண்ணா சொன்ன, அந்த கொழ கொழப்பா...'' என்ற கதிரின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை, மதிவதனி. அவரது பார்வை அந்த ஈரக்கோட்டின் மீதே இருந்தது.

''மேம்... இங்கேயும் ஒரு கோடு இருக்கு...'' என்றான் கதிர்.

''அந்த தடயத்தை கலைச்சிடாதீங்க...'' என்ற மதிவதனியின் குரலில் ஒரு விஞ்ஞானியின் எச்சரிக்கை இருந்தது.

''வேற கோடுகள் இருக்கான்னு பாருங்க...''

ஆறு பேரின் பார்வையும், ஆய்வக தரை முழுக்க அலைந்தது. எதுவும் தெரியவில்லை.

மீண்டும் முழு பகுதியையும் கூர்ந்து கவனித்தார், மதிவதனி. பின், அமைதியாக எழுந்து நடந்தார்.

மேஜையை திறந்து, இரண்டு, 'டெஸ்ட் டியூப்'கள், நுனியில் பஞ்சு பொருத்தப்பட்ட குச்சிகள், கையுறையை எடுத்தார்.

''மேம்... என்ன பண்ணப் போறீங்க...'' என்று கேட்டாள், அஞ்சலி.

''இந்த ஈரக்கோடு என்னன்னு தெரிஞ்சிக்கணும். அதனால இதோட மாதிரியை சேகரிக்கப் போறேன்...'' என்றார், மதிவதனி.

கையுறையை அணிந்தார், மதிவதனி.

அதைப் பார்த்து, ''மேம்... இதைத் தொடுறது ஆபத்தானதா...'' என்றான், பரத்.

''தெரியல... ஆனா, முன்னெச்சரிக்கையா இருக்குறது நல்லது...'' என்றார், மதிவதனி.

அந்த பதில், ஐவரையும் அமைதி ஆக்கியது.

அஞ்சலி காட்டிய கோட்டில் இருந்த ஈரத்தின் மீது, குச்சியின் நுனியில் இருந்த பஞ்சை, மெதுவாக உருட்டினார் மதிவதனி. அந்த பிசுபிசுப்பான ஈரம், பஞ்சில் ஒட்டியது.

அதைக் கவனமாக, 'டெஸ்ட் டியூப்' உள்ளே போட்டார். அதேபோல, கதிர் கண்டுபிடித்த கோட்டின் ஈரப்பதத்தில் இருந்தும் மாதிரியைச் சேகரித்தார், மதிவதனி.

இதற்குள் அஞ்சலி, அந்தக் கோட்டின் ஒரு முனையில் இருந்து, மறு முனை வரை சென்று பார்த்தாள்.

மேஜையில் துவங்கிய அந்தக் கோடு, 'இன்குபேட்டர்' வரை நீண்டிருந்தது.

சேகரித்திருந்த மாதிரிகளை பத்திரப்படுத்தினார், மதிவதனி.

- தொடரும்- ஜாரா நரேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us