PUBLISHED ON : நவ 14, 2026

மருங்காபுரி மன்னராக இருந்த பராக்கிரமதாசருக்கு அன்று பிறந்தநாள்.
அதற்காக ஆடம்பரமாக விழா, நடத்தப்பட்டது. அரச பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினர்.
புலவர் மெய்ஞானர் எடுத்து வந்த பரிசுப் பொட்டலம், வித்தியாசமாக இருந்தது. அவையில் இருந்தோரிடம், 'என்ன பரிசு இருக்கும்' என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்திருந்ததது. பொட்டலத்தை பிரிக்கும்படி கூறினார், மன்னர்.
பிரித்த போது நன்றாக பழுத்திருந்த புளியம்பழம் ஒன்று இருந்தது.
அவையில் இருந்தோர் கேலியாக சிரித்தனர்.
'புலவரே... இந்த பொருளை தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன...' என கேட்டார், மன்னர்.
'ஒரு நாட்டை ஆளும் மன்னர், எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்குவது, புளியம்பழம் ஒன்று தான்... மன்னர் பொறுப்பு வகிப்பவர், புளியமரத்தில் காய்க்கும் பழத்தை போன்றவர். பழத்தின் சுவையைப் போல இனிமையாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், ஆசாபாசங்கள் என்ற ஓட்டில், ஒட்டாமலும் இருக்க வேண்டும். இதை விளக்கவே, புளியம்பழத்தை பரிசாக எடுத்து வந்தேன். புளியம்பழமும், அதன் மேலிருக்கும் ஓடும் போல ஆட்சி செய்யுங்கள்...' என்றார், புலவர்.
கரஒலி எழுப்பி ஆரவாரம் செய்தனர் அவையினர்.
கண்கள் பனிக்க ஆசனத்தை விட்டு எழுந்தார், மன்னர். புலவரை கட்டித் தழுவியபடி, 'சரியான புத்தி புகட்டினீர். நான் ஆசாபாசங்களுக்கு அடியைாக இருக்கிறேன் என்பதை உணர்த்தி வீட்டீர். ஒரு பிறந்தநாள் விழாவிற்கு, இத்தனை ஆடம்பரம் தேவையில்லை தான். பொதுமக்கள் பணம் வீணாகும்படி செய்து விட்டேன்...' என, வருந்தினார்.
பின், 'இனி... என் பிறந்த நாளில் வறுமையில் வாடும் ஆதரவற்ற ஏழைகள், முதி்யோருக்கு அன்னதானம் செய்யுங்கள். வீர விளையாடுகள் நடத்துங்கள். வெற்றி பெறும் அனைவருக்கும் பொன்னும், பொருளும் கொடுங்கள்...' என உத்தரவு இட்டார் மன்னர்.
புலவர் மெய்ஞானர் மகிழ்ந்து, மன்னரை வாழ்த்தினார்.
பட்டூஸ்... வீண் ஆடம்பரம் தவிர்த்து, எளிமையாக வாழ வேண்டும்.
- வி.சி.கிருஷ்ணரத்னம்
