PUBLISHED ON : ஜன 17, 2026

குவாக்கா என்பது, ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட, மாக்ரோபோடிடே என்ற, கங்காரு குடும்பத்தைச் சேர்ந்த, பாலுாட்டி விலங்கு.
இது, 'உலகின் மகிழ்ச்சியான விலங்கு' என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், அதன் முகத்தில், இயல்பாக ஒரு புன்னகை போன்ற தோற்றம் இருக்கிறது.
குவாக்காக்கள், ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ராட்னெஸ்ட் தீவு மற்றும் பால்ட் தீவு போன்ற, சில சிறிய தீவுகளில் காணப்படுகின்றன.
இவை, 40 செ.மீ., நீளமும், 3 கிலோ எடையும் கொண்டவை. இவற்றின் உடல், மென்மையான பழுப்பு நிற ரோமங்களால் மூடப்பட்டிருக்கும். இவை புல், இலைகள், மரப்பட்டைகள் மற்றும் சிறு தாவரங்களை உணவாக உட்கொள்ளும் தாவர உண்ணி.
இது, கருவுற்று 27 நாட்களில், ஒரு குட்டியைப் பெற்றெடுக்கும். அந்தக் குட்டி, ஆறு மாதங்கள் வரை தாயின் பையில் வளரும்.
குவாக்காக்களின் மகிழ்ச்சியான தோற்றம் மற்றும் நட்பு குணம், அவற்றை உலகளவில் அன்புக்குரியவையாக மாற்றியுள்ளன. இவை, மனிதர்களிடம் பயமின்றி நட்பாக இருக்கும் தன்மை கொண்டவை.
இதனால், ராட்னெஸ்ட் தீவில், குவாக்காக்களுடன் சுற்றுலாப் பயணியர், 'செல்பி' எடுத்துக் கொள்வது பிரபலம். இருப்பினும், அவற்றுக்கு உணவளிப்பது அல்லது தொந்தரவு செய்வது, அங்கு சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாழிட இழப்பு மற்றும் பிற வேட்டையாடி விலங்குகளால், அழிந்து வரும் இனமாக குவாக்காக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
- வி.திருமுகில்

