
பெண் குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11 அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
இதை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு 2012ல் உருவாக்கப்பட்டது.
உலகின் பல பகுதிகளில், பெண் குழந்தைகள் பாகுபாடு, வன்முறை, குழந்தை திருமணம், கல்வி இன்மையால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றை பூர்த்தி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்துக்கான கருப்பொருள் அறிவிக்கப்படுகிறது. அதன்படி பெண் குழந்தைகளின் திறன்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது; முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள செயல்களை அகற்றும் வகையில் அமைகிறது.
பெண்ணின்...
● தலைமை ஏற்கும் திறனை வளர்ப்பது
● புதிய தொழில்நுட்ப உருவாக்கத்தில் பங்கேற்க வைப்பது
● சமத்துவ நிலைக்கான கல்வியை வழங்குவது போன்ற கருப்பொருட்கள் கடந்த ஆண்டுகளில் மையப்படுத்தப்பட்டன.
பள்ளி, அரசு சாரா நிறுவனம், சமூக அமைப்புகள் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இந்த நாளில் நடத்துகின்றன. பெண் குழந்தைகளின் திறனை வளர்க்கவும், முன் மாதிரிகளை அறிமுகப்படுத்தவும் இந்த நிகழ்வுகள் உதவுகின்றன.
பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதில் தீவிரம் காட்டுவதுடன் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது நம் நாடு. ஆனாலும் பெண்கள் பள்ளியில் கற்க முடியாத நிலை பல இடங்களில் நிலவுகிறது. இதற்கு, குடும்ப வறுமை, மரபு வழி சமூக நம்பிக்கை, பாதுகாப்பின்மை போன்றவை காரணங்களாக உள்ளன.
பெண் குழந்தைகள் தினத்தையொட்டி நடக்கும் நிகழ்ச்சிகள், இத்தகைய தடைகளை உடைக்க வழிவகுக்கின்றன. பெண்களின் திறமையை அங்கீகரித்து, சம வாய்ப்பை உருவாக்க உத்வேகம் அளிக்கும் நாளாக இது விளங்குகிறது.
- வி.பரணிதா