
மதுரை, தெற்குவாசல், நாடார் மேல்நிலைப்பள்ளியில், 1991ல், 9ம் வகுப்பு படித்தேன். எங்கள் தமிழாசிரியர், யாழ் சுந்தரம். பெயருக்கு ஏற்றாற்போல இனிமையாக தமிழ் கற்றுத்தருவார்.
அவரின் தமிழ் வகுப்பு மிக நேர்த்தியாக இருக்கும். இலக்கணம் தெரியாத மாணவன் கூட தமிழை தவறில்லாமல் எழுதவும், உச்சரிக்கவும் பழக்கப்படுத்தி விடுவார். மாணவர்களுக்கு சலிப்பு தட்டாமல் இருக்க, அவ்வப்போது பல பொது அறிவு விஷயங்கள் குறித்தும் பேசுவார். சமயோசிதமாக யோசிப்பதற்கும், செயல்படுவதற்கும் கற்றுதருவார்.
ஒருநாள், 'கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்ற பழமொழிக்கு இணையாக, புதுமொழி சொல்லுங்க...' என்றார். 'கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்... இளையராஜா வீட்டு இட்லி தட்டும் இசை பாடும்...' என்றேன், நான்.
அனைவரும் சிரித்தனர். ஆசிரியரும் உடன் சேர்ந்து புன்னகைத்தார். சமயோசிதமாக செயல்படுவதாக பாராட்டி, வாழ்த்தினார்.
வினாடி- வினா போட்டி, பொது அறிவு போட்டி, கட்டுரை போட்டி, கையெழுத்து போட்டி என, பலவற்றிலும் கலந்து கொள்ள, தமிழாசிரியர் யாழ் சுந்தரம் ஊக்குவித்தார். அவர் எதிர்பார்த்தபடியே, போட்டிகளில் வெற்றி பெற்று, பரிசுகள் வாங்கினேன். சிறுவர்மலர் இதழில் வெளிவரும் போட்டிகளிலும் சில முறை பரிசு பெற்றுள்ளேன்.
நான், 11ம் வகுப்பு படிக்கும் போது திருப்பூருக்கு குடிபெயர நேரிட்டது. அதன் பிறகு தமிழாசிரியர் யாழ் சுந்தரத்தை சந்திக்க முடியவில்லை.
தற்போது என் வயது, 47. வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி ஆலோசகராக உள்ளேன். இப்போதும், தினமலர், சிறுவர் மலர், வாரமலர் இதழ்களை விரும்பி படித்து வருகிறேன். சமூக செயற்பாட்டாளராகவும் இருக்கிறேன். 'டிவி' விவாத நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறேன்.
பள்ளிக்காலத்தில் எனது திறமையை ஊக்குவித்து, இப்போதையை நிலைக்கு உரமிட்ட தமிழாசிரியர் யாழ் சுந்தரத்தரத்தை, போற்றி வணங்குகிறேன்.
-- எஸ்.பி.சுந்தரபாண்டியன், திருப்பூர்.
தொடர்புக்கு: 94453 44410

