PUBLISHED ON : நவ 07, 2026

சந்தோஷத்தில் துள்ளி குதித்தான் ராஜா.
''அக்கா... நம்ம தாத்தா, ஊரிலிருந்து மாலையில் வரப்போறாரு. அம்மாவிடம் போன் செய்திருக்கிறார்...''
''சரி... சரி... ரொம்ப குதிக்காதே. விழப் போற...'' என சிரித்தாள், அக்கா வனிதா.
'நாளை ஞாயிற்றுக்கிழமை... பள்ளி விடுமுறை. அதனால், தாத்தாவோடு ஜாலியா பொழுதை கழிக்கலாம்' என எண்ணினான், ராஜா.
மறுநாள் -
அதிகாலை 5:00 மணிக்கு எழுந்தார் தாத்தா. பின் நடைப்பயிற்சிக்கு தயாரானார். ராஜாவுக்கும் சீக்கிரமே முழிப்பு வந்து விட்டது.
''இருங்க தாத்தா, நானும் உங்களோடு வரேன்...'' என்று கிளம்பினான்.
''வாப்பா... பேசியபடியே போய் வரலாம்...'' என்றார், தாத்தா.
வழி நெடுக தாத்தாவிடம் கேள்வி கேட்டபடியே நடந்தான், ராஜா.
''சரி, நீ படித்து முடித்ததும் என்ன ஆகப் போற...''
''தாத்தா... நான் ஆசிரியராக ஆசைப்படுறேன். நான் சம்பாதித்து, அப்பா, அம்மா, அக்கா கூடவே, உங்களையும், பாட்டியையும் நல்லா சந்தோஷப்படுற மாதிரி கவனிப்பேன்...'' என்றான், ராஜா.
''அப்படியா... ஏன் இப்போதிலிருந்தே எங்கள சந்தோஷப்பட வைக்க முடியாதா...''
''அதெப்படி தாத்தா... இப்ப தான், 7ம் வகுப்பு படிக்கிறேன். இன்னும் நிறைய படித்து வேலைக்கு போன பின் தானே சம்பாதிக்க முடியும். அப்ப தானே உதவி செய்ய முடியும்...''
தாத்தாவின் முகத்தை ஏறிட்டு பார்த்தான், ராஜா.
''நீ நினைச்சா இப்போதே முயற்சி செய்யலாம்...''
''எப்படி முடியும்...''
''நான் சொல்வதை கவனமா கேள். பெற்றோருக்கு கீழ்படிதல், பள்ளியில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை கவனமாக படித்தல், பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்று, முதல் மாணவனாக வரும் போது, அனைவரும் சந்தோஷப்படுவோம். நான் சொல்றது சரிதானே...'' என்றார், தாத்தா.
''சரி தான். ஒவ்வொரு நாளையும், பயனுள்ளதாக மாற்றினால் அனைவருக்கும் மகிழ்ச்சி தான். என் அறிவு கண்ணை திறந்ததற்கு ரொம்ப நன்றி...'' என்றபடி மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள் நுழைந்தான், ராஜா.
பட்டூஸ்... சுறுசுறுப்புடன் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம்.
- பிரேமா அதிசயம்
