PUBLISHED ON : அக் 10, 2026

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கார்மல் உயர்நிலைப் பள்ளியில், 1974ல், 9ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
தமிழாசிரியராக இருந்த செல்லதுரை மிகவும் அன்பாக பழகுவார். ஆங்கில இலக்கியச் செய்திகளையும் குறிப்பிட்டு சுவைப்பட பாடம் நடத்துவார். மாணவர்கள் தவறு செய்தால் நகைச்சுவையுடன் உணர்த்தி திருத்துவார்.
அப்போது ஆங்கில துணை பாடத்தில் ஷேக்ஸ்பியர் எழுதிய, 'ஒத்தெல்லோ' என்ற நாடகம் பிரபலமாகியிருந்தது. வில்லன் கதாபாத்திரமான இயாகோவின் செயல்பாடு பற்றிய பேச்சு, மாணவர்களிடையே பரபரப்பாக இருந்தது.
அன்றைய வகுப்பில், ஒரு திருக்குறளை படிக்கச் சொன்னார் தமிழாசிரியர். படித்தவன் சற்றுத் தவறுதலாக உச்சரித்ததைத் கண்டு, ஒத்தெல்லோ நாடக வில்லன் பெயரை, 'ஐயகோ' என உச்சரித்து, பிழையை சுட்டிக்காட்டி திருத்தினார். அது, சிரிப்புடன் பிடிப்பினை தந்து நினைவில் தங்கி விட்டது.
எனக்கு, 67 வயதாகிறது. பாதுகாப்பு துறையில் மருத்துவ இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன்.
நாகர்கோவில் அருகே அழகப்பபுரம் பகுதியில் வசிக்கும் தமிழாசிரியர் செல்லதுரையை, அவரிடம் படித்த மாணவர்கள் குழுவாக சமீபத்தில் சந்தித்து ஆசி பெற்றோம்.
அப்போது, உடல் சோர்வுகளை மறந்து, குழந்தைப் போல அளவளாவியது மகிழ்ச்சி தந்தது. நான் எழுதிய, 'திருக்குறளில் மருத்துவம்' என்ற புத்தகத்தை அவருக்கு பரிசளித்தேன். இலக்கியத்தில் நான் காட்டும் ஆர்வம் கண்டு மகிழ்ந்து வாழ்த்தியது பெருமை தந்தது.
- கோ.ராஜேஷ் கோபால், கன்னியாகுமரி.
தொடர்புக்கு: 94431 87606
