PUBLISHED ON : அக் 31, 2026

தஞ்சாவூர், பிளேக் மேல்நிலை பள்ளியில், 1979ல், 8ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...
தமிழாசிரியராக இருந்த தாமோதரன் புலமை மிக்கவர். வகுப்பில் கண்டிப்பை கடைபிடிப்பார். அன்று யாப்பிலக்கணத்தில், 'நேர் நேர் - தேமா, நிரை நேர் - புளிமா, நேர் நிரை - கூவிளம், நிரை நிரை - கருவிளம்...' என பாடம் நடத்தி கொண்டிருந்தார்.
அதில் கவனம் செலுத்தாமல் அருகில் இருந்த மாணவனுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். இதைக் கண்டதும், குறி பார்த்து என் தலை மீது சாக்பீஸ் துண்டை வீசி, கவனத்தை ஈர்த்து, 'எங்கே சொல்லு... நேர் நேர் என்ன...' என கேட்டார் தமிழாசிரியர். எதுவும் புரியாமல், 'தாமா' என கூறி தடுமாறினேன். தமிழாசிரியரின் செல்லப்பெயரான, 'தாமு' என்பதை மாற்றி கூறியதாக வகுப்பே சிரித்தது.
கோபத்தில் பிரம்பை சுழற்றியபடி அருகில் அழைத்தார் தமிழாசிரியர். சிவந்திருந்த அவரது கண்களை பார்த்ததும் பயம் கவ்வியது. அருகே சென்றதும், கோப முகம் மறைந்து குபீர் சிரிப்புடன் என் முதுகில் செல்லமாக தட்டியபடி, 'தாமா இப்படி வாம்மா... எதையும் நகைச்சுவையாக சொல்வது தவறில்லை; அதே சமயம், பிழை நேர்ந்து விடக்கூடாது. தைரியமாக பதில் சொன்னது சிறப்பு...' என பாராட்டினார். பயம் மறைந்து நம்பிக்கை பிறந்தது.
இப்போது என் வயது, 60; சொந்தமாக நெசவு தொழில் செய்து வருகிறேன். வகுப்பில் தமிழாசிரியர் தாமோதரனிடம் பெற்ற பாராட்டு நினைவில் நிறைந்துள்ளது.
- பா.து.பிரகாஷ், தஞ்சாவூர்.
தொடர்புக்கு: 94437 37520
