PUBLISHED ON : அக் 10, 2026

வேலுார் மாவட்டம், பல்லலகுப்பம், செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளியில், 2013-ல், 5ம் வகுப்பு படித்தேன். தலைமையாசிரியராக இருந்த ஏ.குழந்தைசாமி பிள்ளை மிகவும் கண்டிப்பானவர். ஆங்கில பாடமும் நடத்துவார். பாடத்துடன், பொது அறிவு, நற்சிந்தனையை உருவாக்கும் கருத்துகளை கூறி, மனதில் பதியும் வகையில் எழுத வைப்பார்.
மதிய உணவு இடைவேளையின் போது, 'கேட்' அருகே விற்கும் நொறுக்குத் தீனிகளை வாங்கி தின்போரை அதட்டி, உருட்டி பயமுறுத்துவார். நானும் வாங்கி தின்று கையும் களவுமாக பிடிபட்டு அடி வாங்கி உள்ளேன்.
உணவு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட, 'ஜங்க் புட்' படங்கள் வரைந்து, அவை ஏற்படுத்தும் உடல் நலக்கேடுகள் குறித்து புரியும் படி விளக்குவார். பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பின் போது, வகுப்பில் என்னென்ன தவறு செய்தோம் என்பதை எடுத்துச் சொல்லி திருந்த வழி ஏற்படுத்துவார் தலைமையாசிரியர்.
என் வயது 23; எம்.சி.ஏ., பட்டம் பெற்று தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறேன். நிறுவனம் நடத்தும் விருந்துகள், நண்பர் குழு சந்திப்புகள், ஜாலியாக ஊர் சுற்றல் என அனைத்து சூழல்களிலும், 'ஜங்க் புட்' என்ற துரித உணவை தொடாமல் தவிர்த்து வருகிறேன். இதற்கு அறிவுரைத்து அடிப்படை அமைத்த தலைமையாசிரியர் ஏ.குழந்தைசாமி பிள்ளையை மனதில் கொண்டுள்ளேன்.
- மா.நித்யா, பெங்களூரு.
தொடர்புக்கு: 89402 47365
