PUBLISHED ON : அக் 31, 2026

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் டவுன் உயர்நிலை பள்ளியில், 1954ல், 6ம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியராக இருந்த கிரிஷ்ணமாச்சாரி, மாணவர்களின் கையெழுத்து வடிவமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார். புதிதாக சேர்ந்திருந்த என் போன்றோருக்கு நான்கு வரி நோட்டில், அன்றாடம் இரண்டு பக்கங்கள் எழுத பயிற்சி தந்தார். பின், இரட்டை வரி நோட்டில் எழுத பழக்கினார். எழுத்துகள் வடிவமாக அமைந்ததும் ஒற்றை வரியில் அனுமதித்தார். எழுத்துகள் முத்துபோல் திருத்தமாக அமைந்தன.
பள்ளிப்படிப்பை முடித்ததும், பாரத ஸ்டேட் வங்கியில் குமாஸ்தா வேலைக்கான தேர்வுக்கு சென்றேன். எழுத்து தேர்வுக்கு பின் நடந்த நேர்காணலின் போது, 'உன் கையெழுத்து நன்றாக உள்ளது. வங்கிப் பணி செய்வோருக்கு இது மிகவும் அவசியம்...' என பாராட்டி தேர்வு செய்தார், வங்கி மேலாளர்.
எனக்கு, 83 வயதாகிறது. வங்கி துணை மேலாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றேன். கையெழுத்தை திருத்தி, வங்கிப் பணியில் சேரும் வாய்ப்பை ஏற்படுத்தி, என் தலையெழுத்தை மாற்றிய வகுப்பாசிரியர் கிரிஷ்ணமாச்சாரியை ஒவ்வொரு நாளும் வணங்கி மகிழ்கிறேன்.
- எஸ்.ராகவன், சென்னை.
தொடர்புக்கு: 98414 13799
