PUBLISHED ON : நவ 14, 2026

திருவள்ளூர் மாவட்டம், -எளாவூர்- கமலாபுஜம்மாள் நடுநிலைப் பள்ளியில், 1972ல், 3ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனது வீட்டருகே வசித்து வந்த ஏழை நண்பன் அங்கமுத்து, 'பள்ளியில் கிடைக்கும் மதிய உணவை எனக்கு தரலாமே...' என்று என்னிடம் கேட்டான். அதன்படி மதிய உணவை வாங்கி, 1 கி.மீ., துாரம் நடந்து சென்று நண்பனுக்கு வழங்கி வந்தேன்.
இதை கவனித்த வகுப்பாசிரியை ஜோஸபின், 'உனது சொந்த உழைப்பில் உதவிகள் செய்...' என உணர்த்தினார். அதை மனதில் கொண்டேன். படிப்பில் கவனம் செலுத்தி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 'ரேங்க்' வாங்கி, தமிழக கவர்னர் கையால் வெள்ளிப்பதக்கம் பெற்றேன்.
எனக்கு 63 வயதாகிறது. மத்திய தொழிலாளர் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட தணிக்கையாளர் என்ற பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றேன். உழைப்பால் சேர்த்த பணத்தில் உதவிகள் செய்து வருகிறேன்.
முதுமையில், 90 வயதை நெருங்கிய ஆசிரியை ஜோஸபின், இயலாமல் படுக்கையில் இருந்ததை அறிந்தேன். மனைவி, மகளோடு சென்று அவரை சந்தித்த போது, மிகுந்த நெகிழ்வுடன் கண்ணீர் மல்க வாழ்த்தியதை பாக்கியமாக கருதுகிறேன்.
- எம்.அப்துர் ரஹ்மான், சென்னை.
தொடர்புக்கு: 95001 81224
