
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள, கோபால சமுத்திரம் பள்ளியில், 1980ல், ஒன்றாம் வகுப்பு சேர்ந்தேன். அங்கேயே ஏழாம் வகுப்பு வரை படித்தேன். எல்லாரையும் போல, எனக்கும் என் ஒன்றாம் வகுப்பு மேரி டீச்சரை, எப்போதுமே மறக்க முடியாது.
எங்கள் வீட்டில் இருந்து, 500 மீட்டர் தொலைவில், தெருக்கோடியில் பள்ளி இருந்தது. வீட்டில் இருந்து என் சித்தி, என்னை அழைத்துச் சென்று, பாதி வழியில் இருக்கும் மேரி டீச்சர் வீட்டில் விடுவார்.
அங்கிருந்து, மேரி டீச்சரின் கைவிரலை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, அவருடன் பள்ளிக்கு செல்வேன். எங்கள் வகுப்பறை சற்று உயரமாக இருக்கும். படிகளில் ஏறி தான் வகுப்பறையில் நுழைய முடியும்.
நான் அந்தப் படியில் ஏறி, வகுப்பறைக்குள் நுழைய, மேரி டீச்சர் உதவி செய்வார். இப்போதும், மேரி டீச்சர் என் நினைவில் பசுமையாக உள்ளார். அவரது அன்பை மறக்க முடியாது.
தற்போது என் வயது, 50. இப்போது, நானும் ஒரு ஆசிரியை. அதுவும் முதன் முதலில் பள்ளியில் சேரும் சிறு தளிர்களுக்கு, இரண்டாவது தாயாக இருக்கும், கிண்டர்கார்டன் வகுப்பு ஆசிரியை நான். மேரி டீச்சர் போல, புன்சிரிப்புடனும், அன்புடனும், அக்கறையுடனும் என் பிள்ளைகளை கவனித்துக் கொள்கிறேன். இதற்கு அடித்தளமிட்ட மேரி டீச்சரை இப்போதும் நினைத்து பெருமிதம் கொள்கிறேன்; அவரை வணங்குகிறேன்.
- ஜி.கீதா ராஜா, சென்னை. தொடர்புக்கு: 97907 43719

