PUBLISHED ON : அக் 10, 2026

புலி எதிரில் நிற்பதை கண்டு திடுக்கிட்டது, வெள்ளாடு. இருப்பினும், கண்களில் அச்சத்தை காட்டிக்கொள்ளவில்லை.
இது கண்டு வியப்பில் ஆழ்ந்தது, புலி.
'என்னைக் கண்டு பயம் வரவில்லையா...'
அதட்டியது, புலி.
'இல்லை. என்னை கொன்று பசியை தீர்த்துக் கொள்...'
'உனக்கு உண்மையில் அச்சமே இல்லையா...'
'இல்லை. இன்று உன்னிடம் தப்பினாலும், என்னை வளர்ப்பவர் நாளை பலியிட்டு இரையாக்கி கொள்வார். அதனால் கவலையில்லை...' என்றது.
வெள்ளாட்டின் மீது இரக்கம் கொண்ட புலி, அதை வேட்டையாடும் முடிவை கைவிட்டது.
'எனக்கு நீண்ட ஆயுள் இருந்தாலும், என் உயிர், வளர்ப்பவரின் கையால் தான் போகும். என் உடன் இருந்த ஆட்டை இழுத்து சென்றபோது, 'வருந்தாதே... இது நம் தலையெழுத்து. குட்டிகளை கவனித்து கொள்' என்று அமைதியுடன் சொன்னது. இதுதான் ஆடுகளின் வாழ்க்கை. சீக்கிரம் என்னை இரையாக்கி, பசியை தீர்த்துக் கொள்...' என்றது, வெள்ளாடு.
அருகே வந்த புலி, 'உன் கதையை கேட்டதும், இரக்கம் வந்தது..' என்றது.
தப்பிய வெள்ளாடு இருப்பிடத்துக்கு வந்தது. குட்டிகள் அதை சுற்றி மகிழ்ச்சியுடன் துள்ளின.
குழந்தைகளே... அச்சமின்றி வாழ்ந்தால் எதையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.
- எல்.மகாதேவன்
