
தீபிகாவும், ராதாவும் தோழியர். ஒரே பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தனர். படிப்பில் படு சுட்டியாக இருந்தனர்.
எப்போதும் அன்பாகவும், அமைதியாகவும் பழகக் கூடியவள் ராதா.
பார்க்க அழகாகவும், பணம் இருப்போருடன் மட்டுமே நட்பாக இருப்பாள் தீபிகா. மற்றவர்களை, உருவத்தை பழித்து கேலி செய்வாள்.
''அழகு நிரந்தரம் இல்லாதது; அன்புதான் நிலையானது. வயதானால் அழகெல்லாம் பறி போய்விடும். அனைவரிடம் அன்பாக பழகு...''
அறிவுரை கூறினாள் ராதா. அதை ஏற்கும் நிலையில் இல்லை தீபிகா.
''நீ வேண்டுமானால் அன்பாக இரு... முல்லை கொடி படர தேர் கொடுத்த பாரி வள்ளல் போல், உயிரினங்களிடம் அன்பாயிரு... எனக்கு அதெல்லாம் ஒத்து வராது...''
கிண்டலாக கூறி சிரித்தாள் தீபிகா.
நா ட்கள் உருண்டோடின -
பள்ளி இறுதித் தேர்வு வந்தது. இருவரும் நல்ல முறையில் தேர்வு எழுதினர். விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர்.
விடுமுறை முடிந்தது.
முதல் நாள், பள்ளிக்கு சந்தோஷமாக வந்து கொண்டிருந்தனர் மாணவ, மாணவியர்.
வழக்கத்திற்கு மாறாக யாருடனும் பேசாமல், தனியே தலை குனிந்து அமர்ந்திருந்தாள் தீபிகா.
அதைப் பார்த்த ராதா, ''என்ன ஆச்சு.... ஏன் தனியாக உட்கார்ந்திருக்கிறாய்...'' என, அன்பொழுக கட்டி அணைத்துக்கொண்டாள்.
கண்களில் நீர் பெருக, நிமிர்ந்தாள் தீபிகா. முகத்தில் மாற்றங்கள் தெரிந்தன. பருக்கள் தோன்றியிருந்தன. முகப்பொலிவை, அது கொஞ்சம் மாற்றி இருந்தது. இதை பார்த்தாள் ராதா. பிரச்னை புரிந்தது.
''கவலைப்படாதே தீபிகா... இது சாதாரண ஹார்மோன் மாற்றம் தான். தானாக சரியாகிவிடும். தகுந்த தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்...''
ராதா கூறிய ஆறுதலில், உருகிப்போனாள் தீபிகா.
''நீ சொன்னது சரிதான். வெளித்தோற்றம் காலப்போக்கில் மாறக்கூடியது. மற்றவர்களிடம் காட்டும் அன்புதான் தோற்றத்திற்கே புதுப்பொலிவையும், அழகையும் தருகிறது. இதை உன் வழியாக தெரிந்து கொண்டேன்...''
கண்களில் நீர் வழிய சொன்னாள் தீபிகா.
அன்று முதல் வகுப்பில் அனைவரிடமும் அன்பாக பழகத் தொடங்கினாள் தீபிகா.
செல்லங்களே... அன்பு காட்டினால் மனம் மகிழ்ச்சி அடையும்; அப்போது முகத்திற்கு தானாக பொலிவு வரும்.
ஜெயந்தி சந்திரசேகரன்

