sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

மாறியது நெஞ்சம்!

/

மாறியது நெஞ்சம்!

மாறியது நெஞ்சம்!

மாறியது நெஞ்சம்!


PUBLISHED ON : பிப் 14, 2026

Google News

PUBLISHED ON : பிப் 14, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி பஸ்சில் இருந்து இறங்கி, புத்தகப் பையுடன் வீட்டுக்கு நடந்தான், சுரேஷ். தலை லேசாக வலிப்பது போலிருந்தது.

சுரேஷ் படிக்கும் பள்ளியில் தான், ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாள், அவனின் அம்மா. சிறப்பு வகுப்புகள் முடித்து, தாமதமாகத் தான் வீடு திரும்புவாள்.

பூட்டிய வீட்டைத் திறந்து உள்ளே போய், தானே பால் காய்ச்சிக் குடிக்க வேண்டும். சமையலறைக்குள் போகப் பிடிக்காமல், 'டிவி' முன் அமர்ந்து, அதை இயக்கினான் சுரேஷ்.

எந்த நிகழ்ச்சியும் பிடிக்கவில்லை. ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டிருந்ததில் நேரம் ஓடியது.

அம்மாவும், வீட்டிற்கு வந்து விட்டாள்.

''பால் குடித்தாயா...'' என்று, சுரேஷிடம் கேட்ட படி சமையல் அறைக்குள் சென்றாள், அம்மா.

பாலுடன் திரும்பி வந்த அம்மா, ''உடம்பு சரியில்லையா...'' என்றபடி, சுரேஷின் நெற்றியை தொட்டு பார்த்தாள். மவுனமாக இருந்தான் சுரேஷ்.

தனக்கும் காபி கலந்து, 'டிவி' முன், சுரேஷுக்கு அருகில் நாற்காலி போட்டு அமர்ந்தாள், அம்மா.

''இன்னிக்கு எட்டு பீரியடும் கிளாஸ். ஒரே கால்வலி...'' என்றாள், களைப்பாக.

சுரேஷுக்கு எரிச்சலாக இருந்தது. 'வழக்கமாகப் பாடும் பல்லவி தான்' என, மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

முன்பெல்லாம், அம்மாவுக்கும் சேர்த்து காபி கலந்து தருவது மட்டுமன்றி, வீட்டு வேலையிலும் அம்மாவுக்கு உதவியாக இருப்பான், சுரேஷ். இப்போதெல்லாம் அம்மாவுக்கு உதவி செய்யவே பிடிக்கவில்லை.

சுரேஷ் படிக்கும் தனியார் பள்ளியின் இன்னொரு கிளையில் தான், முந்தைய ஆண்டு வரை அம்மா வேலை பார்த்து வந்தாள்.

அம்மா என்றால், சுரேஷுக்கு மிகவும் பிடிக்கும். தாழம்பூ நிறமும், கூரிய நாசியும், திருத்தமான முகமுமாக அம்மாவின் ஜாடையில் தான், சுரேஷும் இருந்தான். அதில் சுரேஷுக்கும் பெருமை.

அம்மா ஏற்கனவே கேட்டுக் கொண்டபடி, சுரேஷ் படிக்கும் பள்ளிக்கே அவளை நிர்வாகத்தினர் பணியிட மாறுதல் செய்தனர். சந்தோஷத்துடன் பணியில் சேர்ந்தாள், அம்மா.

'நம்ம சுரேஷ் வகுப்புக்கும் நீ சொல்லி தருவியா...' என்றார், அப்பா.

'இல்லை. சுரேஷ் 9ம் வகுப்பு படிக்கிறான்; நான், 11 - 12ம் வகுப்புக்குத்தான் ஆசிரியையாக நியமிக்கப்பட்டிருக்கிறேன்...' என்றாள், அம்மா.

ஆனால், எதிர்பாராத விதமாக 9 - 10 வகுப்புகளுக்கு கணக்கு பாடம் கற்றுத்தரும் ஆசிரியை ராஜினாமா செய்ததால், சுரேஷின் அம்மாவே பொறுப்பேற்க வேண்டி வந்தது.

அவளை யாரிடமும் தன் அம்மா என்று, சுரேஷ் சொல்லிக் கொள்ளவில்லை. முதல் நாள் வகுப்பெடுத்த அம்மா, மிக அழகாக பாடம் சொல்லி கொடுத்தாள். சம்பிரதாய அறிமுகத்தின் போது கூட, எல்லா மாணவர்கள் பெயரைக் கேட்பது போல, சுரேஷிடமும் கேட்டாள். தன் மகன் என, காண்பித்துக் கொள்ளவில்லை. ஆனால், நீண்ட நாள் அதை மறைக்க முடியவில்லை.

வேதியியல் பாடம் எடுக்கும் சீதா டீச்சர், செய்முறை வகுப்பின் போது, இவன் கன்னத்தைக் கிள்ளி, 'நீ புதுசா வந்திருக்கிற கணக்கு டீச்சர் பையன் தானே. அப்படியே அவங்களை நகலெடுத்த மாதிரி இருக்கியே...'' என்றாள்.

வேறு வழியின்றி, 'யெஸ் மேடம்...' என, சுரேஷ் சொல்ல வேண்டியதாயிற்று.

அம்மா சிறந்த ஆசிரியை என்றாலும், ரொம்ப கண்டிப்பானவள். இதனால், அவளிடம் எல்லா மாணவர்களுக்கும் பயம். முந்தைய ஆண்டு வரை சுரேஷுடன் நட்பாக இருந்தவர்கள், அவனிடமிருந்து விலக ஆரம்பித்தனர்.

'எல்லாவற்றிற்கும் காரணம் அம்மா தான்' என, மனம் குமுறினான், சுரேஷ். இதனால், வீட்டிலும் தனிமைப்படுத்திக் கொண்டான். அம்மாவுக்கு ஒத்தாசையாக இருப்பதையும் வெறுத்தான்.

அ ன்று, ஞாயிற்றுக்கிழமை.

மதியம் சாப்பிட்டு விட்டு படுத்த சுரேஷ், வழக்கத்திற்கு மாறாக துாங்கிப்போனான். ஹாலில் பேச்சுக் குரல் கேட்டு, கண் விழித்தான்.

அம்மாவும், அப்பாவும் தான் பேசிக் கொண்டிருந்தனர்.

''இப்போல்லாம் அடிக்கடி கால்வலின்னு சொல்றே. எப்போ பார்த்தாலும், பேப்பர் திருத்தும் வேலை இருக்கு. வீட்டு வேலைக்கும் ஆள் போட்டுக்க மாட்டேங்குறே. வீட்டிலும் வேலை, பள்ளியிலும் வேலைன்னா உடம்பு என்ன ஆகும்...'' என்றார் அப்பா.

''நான் சீனியர் என்பதால், புதுசா வந்தவங்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியிருக்கு. நான் வேலை பார்ப்பதால், அந்த பள்ளியில் படிக்கும் நம்ம சுரேஷுக்கு கல்விக் கட்டணம் கிடையாது. நானே நேரடியாக கவனிக்கும் போது, அவன் நல்லா படிப்பான். ஏற்கனவே வீட்டு வேலைக்கும், சமையலுக்கும் ஆள் போட்ட போது, நம்ம சுரேஷுக்குப் பிடிக்கலை. ஞாபகம் இருக்கா...'' என்றாள், அம்மா .

''ஆமாம், அவனுக்கு பிடிக்கவில்லை. உன் சமையலைப் போல ருசியாக இல்லைன்னு சொன்னதால் தான், நீ ரொம்ப உணர்ச்சிவசப்பட்டாய்... அதனால் தான், ஆசிரியை வேலையுடன், வீட்டு வேலைகளையும் இழுத்து போட்டு செய்து கொண்டிருக்கிறாய்...'' என்றார், அப்பா.

தனக்காகத்தான் அம்மா இத்தனை சிரமத்தை அனுபவிக்கிறாள் என்ற உண்மையை உணர்ந்து, கண்கலங்கினான், சுரேஷ்.

'எனக்காக சிரமப்படும் அம்மாவுக்கு, இனி எல்லா விதத்திலும் உதவுவேன். அம்மா ஆசைப்படுவதை போல, படிப்பில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெற்று, அம்மாவுக்கு நல்ல பெயரை வாங்கித் தருவேன்' என, தெளிவான முடிவுக்கு வந்தான், சுரேஷ்.

துாங்கி எழுந்து வந்த சுரேஷை பார்த்ததும், ''பால் காய்ச்சி தரட்டுமா...'' என்று எழுந்தாள், அம்மா. அவளின் கைகளை எடுத்து, சுரேஷ் கண்ணில் ஒற்றிக் கொண்டான். ஒன்றும் புரியாமல் விழித்தாள், அம்மா.

அமைதியாக சமையலறைக்கு சென்ற சுரேஷ், காபி கலந்து எடுத்து வந்து, அம்மாவுக்கும், அப்பாவுக்கும் கொடுத்தான்.

''ஞாயிற்றுக்கிழமையாவது சற்று ஓய்வெடுத்துக் கொள், அம்மா...'' என்றான், சுரேஷ். அதில் மனத்தெளிவு இருந்தது.

குட்டீஸ்... பெற்றோர் சிரமப்பட்டு உழைப்பது, குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காகத் தான்.

- சிவகாமசுந்தரி நாகமணி






      Dinamalar
      Follow us