
காலையில் எழுந்தவுடன், அன்றைய கணக்கு பரீட்சை தான் சிவாவுக்கு நினைவுக்கு வந்தது. பரீட்சைக்கு மட்டம் போட திட்டம் போட்டான்.
அம்மாவை தேடி சென்று, புலம்பினான்...
''அம்மா, இரவு முழுவதும் ஒரே வயிற்று வலி. ரொம்ப முடியல. என்னால் இன்றைக்கு பள்ளிக்கூடம் போக முடியாது. சிரமமாக இருக்கு...''
சிவாவை நிமிர்ந்து பார்த்தாள், அம்மா.
''சரி. மருத்துவமனைக்கு போய், டாக்டரிடம் காண்பிச்சு, ஒரு ஊசியைப் போட்டுட்டு வந்துடலாம். சரியாகி விடும்...'' என்றாள்.
'டாக்டர்... ஊசி...' என்றதும், பதறினான் சிவா.
''அதெல்லாம் வேண்டாம் அம்மா. எப்பவும் ஒரு கசாயம் வைத்து தருவியே... அதையே கொடு... சரியாகலைன்னா, மாலை நேரத்துல டாக்டர் கிட்ட போவோம்...'' என்றான்.
''சரி... போய் ஓய்வு எடு... கசாயம் கலக்கி எடுத்து வர்றேன்...'' என்றாள், அம்மா.
சிவாவின் மனதுக்குள் சந்தோஷம்.
'அப்பாடா... கணக்கு பரீட்சையிலிருந்து விடுதலை. கண்ணை மூடி, கசாயத்தை குடித்து விடுவோம். இரவு படுக்கும் போது, வயிற்று வலி சரியாகி விட்டது என பொய் சொன்னால் அம்மாவுக்கு தெரியவா போகிறது...' என, நினைத்துக் கொண்டான், சிவா.
அறைக்கு வந்து மின்விசிறி போட, அது ஓடவில்லை. மின்விளக்கும் அணைந்திருந்தது. அம்மாவின் குரல் கேட்டது...
''இன்றைக்கு மாலை வரை மின்சாரம் இருக்காது, சிவா... நம் பகுதியில் மின்வாரியத்தினர் மின் கம்பி மாற்ற போகின்றனராம். மாலை, 5:00 மணிக்கு மேல் தான் மின்சாரம் வரும்...'' என்றாள், அம்மா.
சிவாவின் உற்சாகம் வடிந்தது.
'அப்படியானால், 'டிவி' பார்க்க முடியாது. மின்விசிறி இயங்காமல், காற்று வராது. எப்படி படுத்து கிடப்பது...' என்று நினைத்தபடி, மொபைல் போனை எடுத்தான், சிவா. அதுவும் அணைந்திருந்தது.
சிறிது நேரம் யோசித்த சிவா, ''அம்மா, இப்போது எனக்கு வயிற்று வலி தேவலாம் போல இருக்கிறது. நான் பள்ளிக்கு கிளம்புகிறேன்...'' என்றான்.
அம்மா அவனை சந்தேகமாக பார்த்தாள்.
''அப்படியா... சரி கிளம்பு...''
அம்மா கூறியதும், அடுத்த அரைமணி நேரத்தில் கிளம்பி விட்டான், சிவா.
''நான் வர்றேன்ம்மா...'' என, 'டாடா' காட்டி விட்டு, சைக்கிளில் ஏறி விரைந்தான்.
தன்னை ஏமாற்ற நினைத்த மகனின் அறியாமையை நினைத்து, மனதுக்குள் சிரித்தாள், அம்மா. வீட்டுக்கு மின்சாரம் வரும் பிரதான இணைப்பை சரி செய்தாள்.
இப்போது வீட்டுக்குள் மின்விசிறி ஓடியது; விளக்கு எரிந்தது.
குட்டீஸ்... நாம் தான் புத்திசாலி என்று, பிறரை ஏமாற்ற நினைக்க வேண்டாம்; நம்மை மிஞ்சிய புத்திசாலிகள், பெற்றோர்.
- சகா

