PUBLISHED ON : அக் 17, 2026

மதிய உணவு இடைவேளை மணி ஒலித்தது. உணவு டப்பாவுடன் சிதறி ஓடினர் மாணவ - மாணவியர்.
ஆனந்தும், ரவியும் வழக்கமாக அமரும் மரத்தடியை நோக்கி நடந்தனர்.
அவர்களுடன் படிக்கும் கண்ணன், அவர்களை அழைத்தபடி பின்னால் ஓடி வந்தான்.
அவனை தவிர்க்க அறிவுறுத்தி வேகமாக நடந்தபடி, ''டேய் ரவி... உடம்பு சரியில்லாம, 10 நாள் லீவுல இருந்து, இன்னிக்கு தான் வந்திருக்கான் கண்ணன். எப்பவும் நம்மை கிண்டல் தானே செய்வான்; நட்பாக பேசவே மாட்டானே... இப்ப என்ன...'' என்றான், ஆனந்த்.
''இருடா பாப்போம்...'' என்று கூறியபடி நின்றான் ரவி.
அருகில் வந்த கண்ணனிடம், ''சாப்பிட போகலையா...என்ன விஷயம்...'' என கேட்டான் ரவி.
''நான், 10 நாட்கள் வகுப்புக்கு வரலை... எல்லா பாடங்களையும் நோட்டில் எழுதி முடிச்சுடுன்னு சொன்னாங்க மிஸ்... நம்ம கிளாஸ்ல நீ தான் அழகா எழுதுவ, உன் நோட்டை தந்து உதவ முடியுமா...'' என்று கேட்டான் கண்ணன்.
''ஓ... அதுக்கென்ன, கட்டாயம் தரேன்...'' என்றான், ரவி.
நன்றி கூறி சென்றான் கண்ணன்.
சற்று கடுப்பான ஆனந்த், ''ஏன்டா ரவி... இப்படி ஏமாளியா இருக்க. இந்த கண்ணன் என்னிக்காவது நட்பா பேசி இருக்கானா... உன்ன கேலி செஞ்சு சிரிப்பானே... நீ செய்யாத தப்புக்கெல்லாம் போட்டு கொடுத்து திட்டுவாங்க வெச்சுருக்கானே... அவன் வந்து கேட்டதும் உடனே நோட்டை தந்துடுவியா... சரியான ஏமாளிடா நீ...'' என கடிந்து கொண்டான்.
''கோபப்படாதே... உதவுறது நல்ல விஷயம் தானே. அவங்க யாரா இருந்தா என்ன...
''நாம உதவாம யார் உதவுவா. போன வாரம் பாடத்துல படிச்சோமே மறந்துட்டியா... அதாவது, கெடுதல் செய்யறவங்களுக்கு, கொடுக்குற தண்டனையே, அவர்கள் வெட்கப்படும்படி நல்லது செய்யறது தான் என்ற குறள் ஞாபகம் வருதா...''
ஒரு கணம் சிந்தித்த ஆனந்த், ''சரியா சொன்ன ரவி... உன்னை என் நண்பன்னு சொல்லவே பெருமையா இருக்கு...'' எ ன அணைத்துக் கொண்டான்.
குழந்தைகளே... நல்ல விஷயங்களை கற்று வாழ்வில் பின்பற்றுவோம்.
பி.வி. சரஸ்வதி
