தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நேர்வழி!

நேர்வழி!

நேர்வழி!

1


PUBLISHED ON : ஜூலை 11, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 11, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மல்லையாபுரம் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்தான், பாபு. அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தான். அவன் வீட்டின் பின்புற நிலத்தில் காய், கனி பயிர்களை நடவு செய்திருந்தான். அவற்றை தண்ணீர் ஊற்றி வளர்ப்பதில், ஆர்வமாக செயல்பட்டான்.

வீட்டு தோட்டத்தில் விளைந்த காய், பழங்களை, அக்கம் பக்கத்தவருக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வான்.

பள்ளியில் மதிய உணவு திட்டத்திற்கு, அவ்வப்போது காய்களை இலவசமாக தருவான்.

காலை பள்ளிக்கு கிளம்பும் முன், பள்ளி விட்டு வந்த பின் என, தன் முழு நேரத்தையும் தோட்டத்திலேயே செலவிட்டான். விடுமுறை நாட்களில் செடி, கொடிகளுக்கு தேவையான தண்ணீர் ஊற்றுவான். இயற்கை பூச்சி விரட்டியை தெளிப்பான். எரு வைப்பது உள்ளிட்ட பணிகளை, ஆர்வத்துடன் தவறாமல் செய்து வந்தான். வீட்டுக்கு வந்த ஆசிரியர், தோட்டத்தை பார்த்து பாராட்டினார்.

அ ன்று பகலில் வீட்டை பூட்டி விட்டு, வேலைக்கு சென்று விட்டனர், பாபுவின் பெற்றோர்.

அப்போது ஆடு, மாடுகள் வீட்டு வளாகத்தில் நுழைந்தன. தோட்டத்தில் புகுந்து சேதம் ஏற்படுத்தின.

பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், இதை பார்த்து மிகவும் வருந்தினான், பாபு. கடும் கோபம் ஏற்பட்டது; சிரமப்பட்டு அடக்கினான்.

கால்நடை உரிமையாளரிடம், ''ஆசை ஆசையாக வளர்த்து வந்த செடி, கொடிகளை உங்கள் ஆடு, மாடுகள் தின்று விட்டன. பலவற்றை மிதித்து சேதப்படுத்தி விட்டன. இதை தவிர்க்கும் வகையில் அவற்றை கட்டி வைத்து பராமரியுங்கள்...'' என அமைதியாக எடுத்துக் கூறினான், பாபு.

அதன் பின்னரும், வீட்டுத் தோட்டத்தில் ஆடு, மாடுகள் புகுந்து சேதப்படுத்துவது தொடர்ந்தது.

இதற்கு ஒரு முடிவு கட்டி, தக்க பாடம் புகட்ட விரும்பினான், பாபு.

ஒருநாள் வகுப்பில் பாடம் நடத்திய போது, 'காய்கறி கழிவு, உணவு கழிவை பாலித்தீன் பையில் கட்டி, கண்ட இடங்களில் பொறுப்பின்றி வீசுகிறோம். அதை உட்கொள்ளும் கால்நடைகள் வயிற்றுக்குள் பாலிதீன் செல்வதால் இறந்து விடுகின்றன...' என, ஆசிரியர் கூறியிருந்தது அவன் நினைவுக்கு வந்தது.

அதன்படி, ஆடு, மாடுகள் தின்பவற்றை சிறுசிறு பாலிதீன் பைகளில் அடைத்தான் பாபு. அவற்றை பொட்டலமாக கட்டி, வீட்டுத் தோட்டத்தில் வீசுவதற்காக வைத்திருந்தான். அதை தின்னும் ஆடு, மாடுகள் இறந்து விடும் என்ற கொடூர எண்ணம், பாபுவின் மனதில் தலைவிரித்தாடியது.

இதை தற்செயலாக கவனித்தார், பாபுவின் தந்தை. விசாரித்த போது விபரத்தை சொன்னான்.

மிகவும் பக்குவமாக, ''ஆடு, மாடுகள் எல்லாம் வாயில்லா ஜீவன்கள். எங்கே பசுமையாக தெரிகிறதோ அங்கே புகுந்து உணவாக எண்ணி, தின்னத்தான் நினைக்கும். உரிமையாளர் அருகில் இருந்து, வழி நடத்தினால் மட்டுமே, அவை மனம் போன படி போகாது...

''நம் வீட்டுத் தோட்டத்தை பாதுகாக்க வேண்டுமென்றால், முதலில் வேலி போட வேண்டும். அப்போது கால்நடைகளால் உள்ளே வர முடியாது. அதை விடுத்து பழிவாங்கும் நோக்கில், குறுக்கு வழியில் நீ எடுத்த முடிவு, தவறானது. நம் செயலால் எந்த உயிரினமும் பாதிக்கப்படக் கூடாது...'' என, எச்சரித்தார், தந்தை. தவறை உணர்ந்தான், பாபு. கட்டி வைத்திருந்த பாலித்தீன் பைகளை குப்பை தொட்டியில் போட்டான்.

அ ன்று விடுமுறை நாள் -

பெற்றோர், நண்பர்களுடன் சேர்ந்து, வீட்டு தோட்டத்தை காக்கும் வகையில், வேலி அமைத்தான், பாபு. பின் கால்நடைகள் உள்ளே வரவில்லை. நிம்மதி அடைந்தான், பாபு.

பட்டூஸ்... எந்த பிரச்னைக்கும் குறுக்கு வழியில் தீர்வு காண முயலக் கூடாது. செயலின் தன்மையை அலசி ஆராய்ந்து, நிரந்தர தீர்வு காண்பதே சிறப்பு.

வி.எஸ்.ராமு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us