
நல்லுார் என்ற சிற்றுாரில் வசித்து வந்தான் ரவி.
அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தான்.
எப்போதும், ஏதேனும் தின்றபடியே இருப்பான். நொறுக்குத்தீனி பிரியன் என்று பட்டப்பெயரும் அவனுக்கு உண்டு.
வகுப்பில் கூட பையில் ஏதேனும் எடுத்து வந்து, ஆசிரியருக்கு தெரியாமல் தின்று கொண்டிருப்பான். ஆசிரியரும் பலமுறை அவனை கண்டித்து இருக்கிறார். அவனால், வாயை கட்டுப்படுத்த முடியவில்லை.
பெற்றோரிடம் அடம்பிடித்து பணம் பெற்று, சாலையோரம் விற்கும் பண்டங்களை வாங்கி தின்பான். பெற்றோர் கண்டித்தும் திருந்தவில்லை. பட்டு உணரட்டும் என அவன் போக்கிலே விட்டு விட்டனர்.
அவன் நண்பன் ராகவனோ அதற்கு நேர்மாறாக இருந்தான்.
பெற்றோரே பணம் கொடுத்து தின்பண்டங்கள் வாங்க சொன்னாலும், ஆரோக்கியமற்ற உணவு பண்டங்களை சாப்பிட மாட்டான்.
கொடுத்த பணத்தை சிறு சேமிப்பாக்கி கொள்வான்.
இரண்டு ஆண்டுகள் ஓடின -
இருவரும், 10ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றிருந்தனர்.
தொடர்ந்து நொறுக்கு தீனி தின்றதால் ரவியின் உடல் பருமனாகி விட்டது. நடக்கவே சிரமப்பட்டான். உடல் ஆரோக்கியம் கெட்டு, அடிக்கடி மருத்துவரை சந்தித்து வந்தான்.
எப்போதும் போல ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்தான் ராகவன்.
எண்ணெய் பதார்த்தங்களையும், கொழுப்பு உணவுகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்த ரவி, நோய்வாய்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அதன் விளைவாக பிளஸ் 2 பொதுத்தேர்வும் எழுத முடியாமல் போயிற்று.
ஆரோக்கியமற்ற உணவு முறைகள் தான் நோய்க்கு காரணம் என்பதை, எடுத்துரைத்தார் டாக்டர்.
வலியும், வேதனையும் வந்தபின் தன் தவறை உணர்ந்தான் ரவி. 'ஜங்க் புட்' என்ற ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனி வகைளை முழுவதுமாக கைவிட்டான்.
தினமும் நடைபயிற்சி, யோகா செய்து ஆரோக்கியத்தை மீட்டெடுத்தான்.
குழந்தைகளே... ஆரோக்கியமற்ற உணவு பதார்த்தங்களை சாப்பிட்டு உடலை கெடுத்து கொள்ளக் கூடாது.
பா.சுபானு

