PUBLISHED ON : ஜூலை 25, 2026

அன்று பள்ளி ஆண்டு விழா.
வளாகத்தில் மேடை அமைத்து கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மேடை அருகே குதுாகலமாக அணிவகுத்திருந்தனர்.
அவர்களுக்கு பரிசளித்து கொண்டிருந்தார், அந்த பகுதி தொழிலதிபர்.
'கைவினை பொருட்கள் தயாரிக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர், 6ம் வகுப்பு படிக்கும் சூர்யா...'
- அறிவிப்பு வெளியானது. சூர்யா செய்திருந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை மேடையில் காட்டினார், ஆசிரியர்.
''பாருங்கள்... வெறும் களிமண்ணையும், வாட்டர் கலரையும் வைத்து, பொம்மையை உருவாக்கியுள்ளான், சூர்யா. மிகவும் தத்ரூபமாக உள்ளது...'' என மகிழ்ச்சியுடன் கூறினார், ஆசிரியர்.
பின், அந்த பொம்மையை மேஜையில் நிறுத்தி சாய்த்து தள்ளி விட்டார். உருண்டு அதன் தலை, தரையை தொட்டது; அடுத்த நொடியே, நிமிர்ந்து கம்பீரமாக நின்றது. ஆசிரியர் மீண்டும், மீண்டும் பொம்மையை கீழே தள்ளினார். தாமதமின்றி நிமிர்ந்து நின்றது பொம்மை.
மாணவ, மாணவியர் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பரிசு வாங்க மேடைக்கு வந்தான், சூர்யா.
மிகவும் மென்மையாக, ''இவ்வளவு அழகாக பொம்மை செய்ய எங்கு கற்றுக் கொண்டாய்...'' என விசாரித்தார், தொழிலதிபர்.
''சென்ற ஆண்டு விடுமுறையில், கிராமத்தில் தாத்தா பாட்டியுடன் தங்கியிருந்தேன். என்னோட, 'கிரிக்கெட் பேட்'டை எடுத்து செல்லவில்லை. புதிதாக ஒன்றை வாங்கி தருமாறு கேட்டேன். அங்குள்ள தச்சரிடம் அழைத்து சென்றார் தாத்தா. புதிய 'பேட்' செய்து தருவதாக கூறினார், அந்த தச்சர்...
''அந்த கைவினை கூடத்தில் தலையாட்டி பொம்மை உருவாக்கிக் கொண்டிருந்தார், மண் பாண்டங்கள் செய்பவர். அதைப் பார்த்ததும் மிகுந்த வியப்பு ஏற்பட்டது. பொம்மையை எத்தனை முறை சாய்த்தாலும், அடுத்த நொடியே நிமிர்ந்தை பார்த்தேன்... அது போல் பொம்மை செய்வதற்கு முயன்று அங்கேயே கற்றுக் கொண்டேன்...''
''மிகவும் சிறப்பு. இந்த பொம்மை குறித்து வேறு என்ன தெரிந்து கொண்டாய்...''
உற்சாகப்படுத்தும் வகையில் கேட்டார், தொழிலதிபர்.
''அந்த பொம்மை கூறும் வாழ்க்கை தத்துவம் குறித்து, தாத்தாவிடம் கேட்டேன். 'வாழ்வில் எத்தனை தடை கற்களில் தடுக்கி விழுந்தாலும், உடனே, முழு முயற்சியுடன் எழுந்து நிற்க வேண்டும். அதைத் தான் சிறு பொம்மை கற்றுத் தருகிறது' என்று விளக்கி கற்பித்தார் தாத்தா...' '
தெளிவாக எடுத்துரைத்தான், சூர்யா.
''வாவ்... மிக நல்ல தத்துவம்...''
பாராட்டி பரிசு வழங்கினார், தொழிலதிபர்.
கரஒலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர், மாணவ, மாணவியர்.
பாராட்டு மழையில் நனைந்தான், சூர்யா.
குழந்தைகளே... முயற்சி செய்தால் தடைக் கற்களை கூட, படிக்கற்களாக மாற்ற முடியும்.
- பா. செண்பகவல்லி
