PUBLISHED ON : செப் 26, 2026

காட்டில் வசித்த நரியும், கழுதையும் நட்பு பூண்டிருந்தன. உணவு தேட, சேர்ந்தே செல்வது என, முடிவு செய்திருந்தன. ஆபத்து ஏற்பட்டால், தாமதமின்றி ஒருவர் மற்றவருக்கு உதவவும் ஒப்பந்தம் செய்திருந்தன.
அன்று இரை தேட புறப்பட்டது நரி. கழுதையை அழைக்க அதன் இருப்பிடம் நோக்கி விரைந்தது.
வழியில், காட்டின் ராஜா சிங்கம் வந்தது. அது, நரியை வழி மறித்தது.
சிங்கத்தை பார்த்ததும், பயத்தில் நடுங்கியது நரி.
எப்படியாவது தப்பும் எண்ணத்தில், 'ராஜாவே... எலும்பும், தோலுமாக இருக்கும் என்னை உண்பதால், உங்கள் பசி குறையாது. உங்களுக்கு வேறு இரையை கொண்டு வருகிறேன்...' என்றது.
'எப்படி அது உன்னால் முடியும்...' என்று கேட்டது சிங்கம்.
'எனக்கு ஒரு கழுதையை தெரியும். நைசாக பேசி அழைத்து வருகிறேன். உங்களின் சில நாள் உணவுக்கு அது போதுமானதாக இருக்கும். சிரமமில்லாமல் அதைப் பிடிக்க உதவியாக இருப்பேன்...' என, நரி கூறியதை கேட்டதும் ஒப்புக் கொண்டது சிங்கம்.
சிங்கத்தை மறைவாக இருக்கக் கூறி, கழுதையை அழைத்து வர சென்றது நரி.
கழுதையிடம் வந்து, 'நண்பனே... இரைத் தேட செல்லலாமா...' என கேட்டது நரி.
இரண்டும் காட்டிற்குள் வந்தன.
சிங்கம் மறைந்திருந்த இடத்தின் அருகே, கழுதையை கொண்டு வந்து நிறுத்தியது நரி.
அசுர வேகத்தில் பாய்ந்து கழுதையை கொன்றது சிங்கம். பின், நரி மீது பாய்ந்து, அதையும் பிடித்துக் கொண்டது.
பதற்றமடைந்த நரி, 'ராஜா... எனக்கு மாற்றாகத் தானே, கழுதையை அழைத்து வந்தேன். உங்களுக்கு உதவிய என்னை ஏன் கொல்லப் பார்க்கிறீர்...' என்று, நடுக்கத்துடன் கேட்டது.
அட்டகாசமாக சிரித்தபடி, 'நெருக்கமாக இருந்த நண்பனையே காட்டிக் கொடுத்த உன்னை நம்ப முடியாது. இதேபோல், நீ உயிர் பிழைப்பதற்காக, பலம் வாய்ந்த வேறு விலங்கிடம் என்னை காட்டிக் கொடுக்க மாட்டாய் என்பதை எப்படி நம்ப முடியும். உன்னை விட்டு வைப்பது, எதிரியை பக்கத்தில் வைத்திருப்பது போல தான்...' என கூறியபடியே, நரியை கொன்றது சிங்கம்.
பட்டூஸ்... நட்பிற்கு துரோகம் விளைவித்தால், தீமை வந்து சேரும்.
- மா. சுதிக்ஷா
