
காட்டில் வெட்டிய மரங்களை எடுத்து சென்றது ஒரு கனரக வாகனம்.
அதில் ஏறி அமர்ந்தன மூன்று குரங்குகள்.
அந்த வாகனம் நகரத்துக்கு சென்றது.
அங்கு இறங்கிய குரங்குகள் வியப்புடன் சுற்றி திரிந்தன. மூன்று நாட்களுக்கு பின் அதே வாகனத்தில் மீண்டும் வனத்திற்கு திரும்பின.
நகரில் சுற்றிய அனுபவத்தை, 'காட்டில் பழம் பறிக்க எத்தனை மரங்களில் தாவ வேண்டியிருக்கிறது. இதுபோல் நகரத்தில் சிரமப்பட தேவையில்லை. வண்டிகளிலும், கடைகளிலும் பழங்களை அடுக்கி வைத்திருக்கின்றனர். கடைக்காரர் அசரும் நேரத்தில் அவற்றை துாக்கி வந்து வயிறார உண்டு மகிழலாம். நகர வாழ்க்கை மிக ஜாலியானது...'
மனம் போன போக்கில் கதைகளை அள்ளி விட்டன.
இதைக் கேட்டு மற்ற குரங்களுக்கு நகரத்திற்கு செல்ல ஆசை வந்தது.
காட்டில் இருந்து புறப்பட்ட கனரக வாகனத்தில் நகரம் நோக்கி படை எடுத்தன.
அங்கு பழக்கடைகள் ஜொலிப்பதை கண்டன குரங்குகள்.
ரசாயனம் கலந்து செயற்கையாக பழுக்க வைத்திருந்த மாம்பழம், வாழைப்பழங்கள் அழகாக அடுக்கப்பட்டிருந்தன.
அவற்றை பார்த்ததும் குரங்குகளுக்கு நாவில் எச்சில் ஊறியது.
கடை ஊழியர் அசந்த நேரம், சில பழங்களை அள்ளி, பாய்ந்து ஓடின குரங்குகள்.
ஒதுக்குப்புறமா ய் சென்று ருசித்து தின்றன.
அன்று இரவு வனத்திற்கு குரங்குகள் புறப்பட்டன.
வழி நெடுக வயிற்றுப்போக்கும், உடல் நலக்குறைவும் ஏற்பட்டது. சில வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டன.
உபாதையில் தப்பிய ஒன்று, கலங்கியபடி வனத்திற்குள் ஓடி, முதிய குரங்கிடம் நடந்ததை கூறியது.
முதிய குரங்கு விரைந்து வந்து மயங்கி கிடந்தவற்றை பரிசோதித்தது. அவை விஷம் கலந்த உணவை உண்ட அறிகுறி தென்பட்டது. வனத்தில் இருந்து எடுத்து வந்த மூலிகைகளை பாதிக்கப்பட்ட குரங்குகளுக்கு கொடுத்தது. உடல் நலிவுற்ற குரங்குகள் சகஜ நிலைக்கு திரும்பின.
பின் போதிக்கும் வகையில், 'இலவசமாக கிடைக்கிறது என எதையும் உண்ணக் கூடாது. அதில் விஷம் கலந்திருக்கலாம். இதனால், உடலில் நோய்கள் உண்டாகும். சிரமப்பட்டாலும், வனத்தில் கிடைக்கும் பழங்களை முயற்சி செய்து பறித்து உண்ண வேண்டும்...' என, பக்குவமாக எடுத்துரைத்தது முதிய குரங்கு. அதை கேட்டு அனைத்தும் தெளிவு பெற்றன.
குழந்தைகளே... உழைப்பால் பெறுவதை வைத்து உண்பதே மகிழ்ச்சி தரும்.
எம்.பி.தினேஷ்

