
''ஸ்கூலுக்கு கல்வி அதிகாரி வர்றாருமா... 'எல்லா மாணவியரும் தலையிலே பூ வைத்து வரணும்'ன்னு, டீச்சர் சொன்னாங்க. பூ வாங்கி வைத்து விடுங்கம்மா...''
பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த நிலா, அம்மாவிடம் கூறினாள்.
''தோ, வர்றேன்...''
சமையலறையில் இருந்த அம்மா கிருஷ்ணவேணி, அஞ்சறைப் பெட்டியைத் துழாவினாள். அதில், காசு எதுவும் இல்லை.
விடுவிடுவென வீட்டின் அருகே இருந்த வேப்பமரத்திடம் சென்றாள். வேப்பம் பூக்கள் அரும்பி இருந்த, சிறு கொத்தை கிள்ளினாள். அதில், இலைகளும் இருந்தன. அதை, நிலாவின் ஜடையில் சொருகி விட்டாள்.
''அம்மா... பூவை சூடச் சொன்னால், இலையை தருகிறாயே...'' என்றாள், நிலா.
''பூவை போல, இலைகளும் அழகு தான்...'' என்று சமாதானம் கூறினாள், அம்மா.
கூந்தலில் வேப்ப இலைகள் அழகாக வீற்றிருக்க, பள்ளிக்கு விரைந்தாள் நிலா.
பள்ளியை ஆய்வு செய்த பின், ஒவ்வொரு வகுப்பறையாக பார்வையிட்டபடி வந்தார், கல்வி அதிகாரி.
நிலாவின் வகுப்பறைக்குள் நுழைந்தார். மல்லி, முல்லை, சிவந்தி, கனகாம்பரம், ரோஜா என பூச்சூடியிருந்தனர், மாணவியர்.
நிலாவின் தலையில் வேப்பம் பூவுடன், இலைகளும் வீற்றிருந்தன. இதை பார்த்த அதிகாரி வியப்பில் ஆழ்ந்தார். அவளின் ஏழ்மை நிலையை புரிந்து கொண்டார்.
புன்னகையுடன், ''உன் பெயரென்ன...'' என, நிலாவை கேட்டார்.
பெயரைச் சொன்னாள், நிலா.
''மரம், மனிதனின் உரம்; அவனின் சுவாசம். எல்லா மாணவியரும் விதவிதமாக பூக்களை சூடியிருக்க, வேப்பம் பூவுடன், இலைகளை சூடி வந்திருக்கிறாள், மாணவி நிலா. இதன் மூலம், மரங்களின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறாள். அந்த மாணவியை பாராட்டுகிறேன்...'' என்றார், கல்வி அதிகாரி.
மாணவியர் கை தட்டி பாராட்டினர். பூரிப்பால் முகம் மலர்ந்தாள் நிலா.
அம்மாவை நன்றியோடு நினைவு கூர்ந்தாள்.
குழந்தைகளே... சூழலுக்கு ஏற்ப வாழ பழக வேண்டும்.
ஆர்.மதுமதி

