
வகுப்பறையில் கவலையுடன் அமர்ந்து இருந்தான் மதிவாணன்.
கவனித்து, அருகில் சென்றார் ஆசிரியர் நல்லமுத்து.
திடுக்கிட்டு எழுந்தான்.
''என்ன நடந்தது; ஏன் கவலையுடன் இருக்கிறாய்...''
கனிவுடன் கேட்டார் ஆசிரியர்.
''ஐயா... நன்றாக படம் வரைந்திருந்தும், ஓவியப் போட்டியில் இந்த முறையும் பரிசு கிடைக்கவில்லை. வகுப்பு தோழர்களிடம் தோல்வி அடைந்து இருந்தால் கூட கவலை அடைய மாட்டேன். வயது குறைந்த, 8ம் வகுப்பு மாணவர்களிடம் தோற்று விட்டேன்; அது தான் கவலையை தருகிறது. ஒருவேளை, மதிப்பெண் போட்ட ஆசிரியர் பாரபட்சம் காட்டி இருப்பாரோ என்ற ஐயம் எழுகிறது...''
குரல் உடைந்து பதிலளித்தான் மதிவாணன்.
''அப்படி எல்லாம், தவறாக எண்ணக் கூடாது. உன் சந்தேகத்தை நிவர்த்தி செய்வது என் கடமை. வா... போட்டியில் பங்கேற்றோர் ஓவியங்களை பார்க்கலாம்...''
ஆசிரியருடன் சென்றான் மதிவாணன்.
முதல் மூன்று இடங்களை பிடித்திருந்த ஓவியங்களை எடுத்து காட்டினார் ஆசிரியர்.
அவற்றின் அழகில் பிரமித்துப் போனான் மதிவாணன்.
''ஐயா... என் ஓவியத்தோடு ஒப்பிட தேவையே இல்லை. அத்தனையும் பேரழகு; பரிசுக்கு சரியான தேர்வு. வயதில் சிறியோராக இருந்தாலும், இவ்வளவு சிறப்பாக எப்படி வரைய முடிந்தது...''
கேள்வி எழுப்பினான் மதிவாணன்.
''அவர்களிடமே கேட்டு விடலாம்...''
மதிவாணனின் சந்தேகத்தை, பரிசு பெற்றிருந்தவர்களிடமே கேட்டார் ஆசிரியர்.
'ஐயா... ஒரு நாளைக்கு, ஒரு மணி நேரம் என, இரண்டு ஆண்டுகளாக பயிற்சி பெறுகிறோம். இது திருப்தி அளிப்பதாக இல்லை; இன்னும் சிறப்பாக வரைய தீவிர பயிற்சி எடுக்க இருக்கிறோம்...'
வென்ற மாணவர்கள் கூறினர்.
''கேட்டாயா...வெற்றி என்பது ஒரே முயற்சியில் வருவதில்லை; தொடர் பயிற்சியால் வருவது. சில நாட்கள் பயிற்சி செய்து, பின் நிறுத்தி விட்டால் வெற்றி எப்படி கிடைக்கும்... அடுத்த ஆண்டு போட்டிக்கு இப்போதே தயாராகு; பயிற்சி செய்தால் வெற்றி உன் வசமாகும்...''
ஆசிரியர் அறிவுரையில் மனம் தெளிந்தான் மதிவாணன்.
பட்டூஸ்... வெற்றிக்கு தொடர் முயற்சி தேவை என உணர்ந்து செயல்படுங்கள்!
பெ. பாண்டியன்

