PUBLISHED ON : மே 16, 2026

அது ஒரு பிரபலமான பெண்கள் மேல்நிலைப் பள்ளி.
பழ கமிஷன் மண்டி உரிமையாளர் மாதவனிடம் கடன் வாங்கி, பள்ளியின் எதிர்புறம், பழம் வியாபாரம் செய்து வந்தார், கந்தசாமி.
ஒ ரு நாள் -
மாலை பள்ளி முடிந்து, பேருந்துக்காக பழக்கடை அருகில் உள்ள மரத்தின் நிழலில் காத்திருந்தனர், சில மாணவியர் மற்றும் ஆசிரியர் - ஆசிரியைகள்.
'கொய்யா கொடுங்க... 20 ரூபாய்க்கு தர்பூசணி கொடுங்க...' என, கந்தசாமியை சுற்றி வட்டமடித்து, வாங்கி சென்றவாறு இருந்தனர்.
வியாபாரத்தில் கண்ணாக இருந்தாலும், சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கவனிக்க தவறுவதில்லை, கந்தசாமி.
சாலை ஓரம் நிற்கும் மாணவியரை, 'கண்ணு... வாகனங்கள் இங்கே வரைக்கும் வருது பாரு... கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்...' என்பார், அக்கறையுடன்.
கூட்டம் சற்று குறைய, நாற்காலியில் அமர்ந்து இளைப்பாறுவார்.
ஒரு நாள், சுற்றும் முற்றும் திரும்பிய போது, மரத்தின் அடியில் ஏதோ மினுமினுப்பதைப் பார்த்து அங்கு சென்றவர், அது ஒரு விலை உயர்ந்த கைக்கடிகாரம் என்பதை பார்த்து, கையில் எடுத்தார்.
'வழக்கம்போல மேரி டீச்சரும், சில மாணவியரும் தான் இங்கு நின்றாங்க... விலை உயர்ந்த இக்கடிகாரத்தை மாணவியர் அணிய வாய்ப்பில்லை. நிச்சயம் டீச்சரோட கைக்கடிகாரமாகத் தான் இருக்கும்...' என, யூகித்தார் கந்தசாமி.
அந்த கணம், இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கினார், பழ கமிஷன் மண்டி உரிமையாளர், மாதவன்.
திகைத்து நின்றார், கந்தசாமி.
''ஏலே கந்தசாமி... என்னை எதிர்பார்க்கலையோ... போன மாசம் கொள்முதல் செய்த பழத்திற்கான பணம் இன்னும் வரலையே. அதுக்குள்ள நேற்றும் வந்து, பழம் கேட்டியா...
''பழைய கடன் பாக்கியே பத்தாயிரம் ரூபாயை தாண்டுது... முதல்ல, அதை கொடுக்கிற வழியைப் பாரு. அதுக்கு முன்னாடி, பழம், கிழம்ன்னு குடோன் பக்கம் வந்தே, பார்த்துக்கோ...'' என, எச்சரித்தார், மாதவன்.
விற்பனையான, 500 ரூபாயையும் கைப்பற்றி கொண்டார்.
''சார், ஒரு வாரமா கடை சரியாக ஓடலை; வெயிலின் தாக்கத்தால் பழங்கள் நிறைய அழுகிடுச்சு. செலவழிச்ச காசை எடுக்க முடியுமான்னு தெரியல. கொஞ்சம் நேரம் கொடுங்க, உங்க பணத்தை தந்து விடுகிறேன்...'' என, கந்தசாமி உறுதி கூற, அங்கிருந்து நகர்ந்தார், மாதவன்.
ம றுநாள் -
மாலை அதே மரத்தின் நிழலில் நின்றிருந்தார், மேரி டீச்சர்.
அருகில் சென்று, ''டீச்சரம்மா... இது உங்க கைக்கடிகாரமான்னு பாருங்க...'' என்றார், கந்தசாமி.
கண்கள் அகல, ஆச்சரியத்துடன், ''ஆமாங்க... என்னுடையது தான். உங்களிடம் எப்படி வந்தது...'' என, வினவினார், மேரி டீச்சர்.
''நேற்று இதே இடத்தில் கிடந்தது. காலையில் மாணவியரிடம் இது பற்றி விசாரித்த போது, உங்க பேர் தான் சொன்னாங்க... என் யூகமும் சரியானது...'' என்றார், கந்தசாமி.
''இந்த கடிகாரத்தை தவற விட்டு, இரவு எல்லாம் துாங்காமல் தவித்தேன். முதல் வருட திருமண நாளன்று என் கணவர் கொடுத்த அன்பு பரிசு, இக்கடிகாரம்...'' என, ஆசை பொங்க கைக்கடிகாரத்தை பெற்று பிரமித்து நின்றார், மேரி டீச்சர்.
மேரி டீச்சரின் பார்வையில், ஏழ்மையிலும் பிறர் பொருட்களுக்கு ஆசைப்படாத கந்தசாமி உயர்ந்து நின்றார்.
பட்டூஸ்... எவ்வளவு கஷ்டத்திலும் நேர்மை தவறக் கூடாது.
ஆனந்தி ராஜேஷ்
